சாலையோரம் மயங்கிக் கிடந்த சிறுத்தைப் பூனைக்கு சிகிச்சை: சிறுத்தை என தகவலால் கொடைக்கானலில் பரபரப்பு

கொடைக்கானல்: கொடைக்கானலில் சாலையோரம் மயங்கி கிடந்த சிறுத்தை பூனைக்குட்டியை வனத்துறையினர் மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் யானை, மான், ப‌ற‌வை அணில், சிறுத்தை, சிறுத்தை பூனை உள்ளிட்ட‌ விலங்கினங்கள் மற்றும் ப‌ல்வேறு வித‌மான‌ பறவை இனங்களும் வாழ்ந்து வருகின்றன. இவை சில நேரங்களில் வனத்தை விட்டு நகர் பகுதிக்குள் வருவதுண்டு.

நேற்று முன்தினம் மாலை அப்ப‌ர்லேக் வியூ சுற்றுலாத்த‌ல‌ ப‌குதியில் சிறுத்தை பூனைக்குட்டி ஒன்று ம‌யங்கிய‌ நிலையில் சாலையின் ஓர‌த்தில் கிட‌ந்துள்ள‌து. அத‌னை பார்த்த‌ அப்ப‌குதி வியாபாரிகள் சிறுத்தை பூனைக்குட்டியினை பாதுகாப்பாக‌ மீட்டு வ‌ன‌த்துறையின‌ருக்கு த‌க‌வ‌ல் அளித்த‌ன‌ர்.இத‌ற்கிடையே, சிறுத்தை பூனைக்குட்டி, சிறுத்தைக்குட்டி போலவே தோற்ற‌ம‌ளித்த‌தால் அத‌னை காண‌ ஆவ‌லுட‌ன் பொதும‌க்கள், சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ள் அப்ப‌குதியில் திரண்ட‌தால் ப‌ர‌ப‌ரப்பு ஏற்பட்டது.

பின்னர் ச‌ம்ப‌வ‌ இட‌த்திற்கு வந்த‌ வ‌ன‌த்துறையின‌ர் கூடியிருந்த‌வ‌ர்க‌ளிட‌ம், இது சிறுத்தை பூனை என‌ விள‌க்க‌ம‌ளித்து அதனை மீட்டு சிகிச்சைக்காக கால்ந‌டை ம‌ருத்துவ‌ம‌னைக்கு கொண்டு சென்ற‌ன‌ர். இந்த சிறுத்தை பூனை குட்டி தாயிடமிருந்து பிரிந்து வழிதவறி சாலைக்கு வந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.