கோவை மாவட்டத்தில் பட்ட பகலில் பெண் கழுத்தை அறுத்து கொன்று விட்டு நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் சிறுமுகை ஜடையம்பாளையம் புதூரை சேர்ந்தவர் விவசாயி முருகையன். இவரது மனைவி சரோஜா (55). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமானதால், முருகையன் மற்றும் சரோஜா தோட்டம் அருகே உள்ள வீட்டில் வசித்து வந்தனர்.
மேலும் இவரது மகன் சுரேஷ்குமார் (37) தனது மனைவி மற்றும் மகளுடன் பயப்பனூர் பகுதியில் வசித்து வந்த நிலையில், வழக்கமாக தோட்டிற்கு வந்து பெற்றோரை பார்த்து செய்வார். இந்நிலையில் நேற்று தந்தை முருகையன் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது வீட்டில் தனியாக சரோஜா மட்டும் இருந்துள்ளார்.
இதையடுத்து வழக்கம்போல் பெற்றோரை பார்ப்பதற்கு காலையில் வராததால் சுரேஷ்குமார், நேற்று மாலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது வீட்டிற்குள் பார்த்தால் தாய் சரோஜா கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். மேலும் அவர் அணிந்திருந்த நகைகளும் காணாமல் போயிருந்தன.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சுரேஷ்குமார் சத்தம் போட்டுள்ளார். இவரது சத்தத்தை கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், இது குறித்து சிறுமுகை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து சரோஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் விசாரணையில் தனியாக இருந்த பெண்ணை கொன்று 18 பவுன் நகை கொள்ளை அடித்தது தெரியவந்தது.
இந்நிலையில் பெண்ணை கொலை செய்து நகைகளை கொள்ளை அடித்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.