மீண்டும் பரவும் கொரோனா: ஸ்டாலின் நடத்தும் அவசர ஆலோசனை!

உலகளவில் சில நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இரு ஆண்டுகள் உலகளவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. உடல்நலம் பாதிப்பு, உயிரிழப்பு, வாழ்வாதாரம் பாதிப்பு, வேலையிழப்பு என உலக மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்தனர்.

மூன்று அலைகளுக்குப் பிறகு கடந்த பத்து மாதங்களாக பாதிப்பு பெருமளவு குறைந்த நிலையில் மக்கள் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கினர். இந்த சூழலில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவிவருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனா, ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சீனாவில் உயிரிழப்பு பெருமளவில் பதிவாகி வருகிறது. இதனால் உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன.

அக்டோபர் மாதம் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் முதன்முதலாக குஜராத்தில் கண்டறியப்பட்டதாகவும், அந்த மாநிலத்தில் 3 பேருக்கும், ஒடிசாவில் ஒருவருக்கும் என மொத்தம் 4 பேருக்கு இந்த வகை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் ஒன்றிய சுகாதாரத் துறை சார்பாக மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. நேற்று ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இன்று மதியம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மற்றொரு முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

இதனால் இந்தியாவில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதற்கான சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர்

சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தடுப்பூசி செலுத்தும் பணிகள் எந்த அளவில் உள்ளன, என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்பது குறித்து முதல்வர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன.

அமெரிக்காவில் நேற்று மட்டும் புதிதாக 51,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 326 பேர் உயிரிழந்தனர். தென் கொரியாவில் நேற்று 88,172 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் 59 பேர் உயிரிழந்தனர். ஆஸ்திரேலியாவில் நேற்று 4,176 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் 22 பேர் உயிரிழந்தனர். தைவானில் நேற்று 19,139 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் 27 பேர் உயிரிழந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.