XBB வைரஸ்: இந்தியாவை அச்சுறுத்துமா… பாதிப்புகள் எப்படி இருக்கும்?

இந்தியாவில் இரண்டு ஆண்டுகளாக புரட்டி போட்ட கொரோனா அலையை வாழ்நாளில் யாராலும் மறக்கவே முடியாது. அதுவும் இரண்டாவது அலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. உச்சபட்ச பிரபலங்கள் முதல் சாமானியர்கள் வரை பலரும் உயிரிழந்தனர். கடும் கட்டுப்பாடுகளால் நிலைமை சீரடைந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது.

அஞ்சும் உலக நாடுகள்

இந்நிலையில் கொரோனா வைரஸின் உருமாறிய புதிய வைரஸ்கள் உலகை அச்சுறுத்த கிளம்பியிருக்கின்றன. குறிப்பாக சீனா, ஜப்பான், அமெரிக்கா, தென் கொரியா, பிரேசில் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவிலும் BF.7 வகை வைரஸ் 4 பேருக்கு பரவியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒமிக்ரான் வைரஸில் இருந்து உருமாறிய வைரஸ் ஆகும்.

இந்தியாவில் BF.7 வைரஸ்

குஜராத்தில் 3 பேருக்கும், ஒடிசாவில் ஒருவருக்கும் BF.7 வகை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட அனைத்து மாநிலங்களும் தயாராகி வருகின்றன. சீனாவில் பரவி வரும் ஒமிக்ரான் வகை உருமாறிய வைரஸ்களான BA.2.75, BA.5, BQ.1, XBB ஆகியவை எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற அச்சம் உண்டாகியிருக்கிறது.

புதிதாக XBB மாதிரி

இதில் XBB வகை வைரஸ் மிக மிக ஆபத்தானது என்ற பேச்சு மருத்துவ வட்டாரத்தில் உலவி வருவதாக சொல்லப்படுகிறது. இது மனிதர்களின் உடலுக்குள் பரவி விட்டால் அவ்வளவு சீக்கிரமாக கண்டறிய முடியாது. இருமல் இருக்காது. காய்ச்சல் வராது. மூக்கு வழியாக மாதிரிகளை எடுத்து பரிசோதித்தாலும் நெகடிவ் என்று தான் வருமாம். அதேசமயம் மூட்டு வலி, தலைவலி, கழுத்து வலி, முதுகின் மேற்புற வலி, நிமோனியா உள்ளிட்டவை ஏற்படக் கூடும்.

மிக மோசமான பாதிப்பு

மிகக் குறைந்த நாட்களில் தீவிர நிலைக்கு கொண்டு சென்று விடுமாம். அறிகுறிகளே தென்படாமல் நோயின் தீவிரத்தை அடைந்தால் அப்புறம் காப்பாற்றுவது மிகவும் கடினம் தான். நேரடியாக நுரையீரலை பாதித்துவிடும். மிக மோசமான சுவாசப் பிரச்சினைகளை உண்டு பண்ணும். அப்புறம் உயிர் பிழைப்பது கேள்விக்குறி தான் என அச்சுறுத்துகின்றனர்.

எப்படி தடுப்பது?

இதனால் கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். திறந்தவெளியாக இருந்தாலும் பிறருடன் 1.5 மீட்டர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். டபுள் லேயர் கொண்ட முகக்கவசத்தை அணிய வேண்டும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்றெல்லாம் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

அச்சப்பட தேவையில்லை

இந்நிலையில் கொரோனா தொற்று காலத்தில் அதன் புள்ளிவிவரங்களை பகிர்ந்து புகழ்பெற்ற விஜயானந்த் தனது ட்விட்டரில் போட்டுள்ள பதிவு ஒன்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதில், ”சீனாவில் பரவி வரும் BA.2.75, BA.5, BQ.1, XBB ஆகியவை ஒமிக்ரான் வைரஸின் உருமாறிய வைரஸ்களே ஆகும். இவை உலகின் பல்வேறு பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன.

இருப்பினும் இந்தியா மற்றும் உலக நாடுகள் கவலைப்பட தேவையில்லை. அவ்வளவு பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தாது. கவலைப்படவோ, அச்சப்படவோ எந்த காரணமும் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் இந்தியர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இருக்கிறது. இருப்பினும் கொரோனா கட்டுப்பாடுகளை முடிந்தவரை கடைபிடிக்க வேண்டியது அவசியமாகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.