பரமக்குடியில் தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்கள்: வைகை ஆற்றின் உபரிநீர் கண்மாய்க்கு செல்லாமல் கடலில் கலக்கிறது..!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தண்ணீர் இன்றி கருகும் நெற்பயிர்களால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ராமநாதபுர மாவட்ட  மக்களின் ஒரே நீர் ஆதாரமாக இருப்பது வைகை தண்ணீரும் வடகிழக்கு பருவமழையும் தான் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இங்கு வசிக்கும் விவசாயிகளுக்கு பாசனத்திற்காக நீர் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. அதுவும் ஒரு சில ஆண்டுகள் வைகை ஆற்றின் உபரிநீர் கண்மாய்களுக்கு செல்லாமல் வீணாக கடலில் கலந்துவருகிறது.

இது தவிர வடகிழக்கு பருவமழையும் பொய்த்து விட்டதால் ராமநாதபுர மாவட்டத்தில் கடும் வரட்சி நிலவுகிறது. கருவேல மரங்களால் பார்திபனூர் மதகு அணையில் இருந்து பிரதான கால்வாய்களுக்கு நீர் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. குறிப்பாக இடது பிரதான கால்வாயிலிருந்து நயினார் கோவில், கல்லடி தெந்தல், பாண்டியூர், வல்லம், உள்ளிட்ட பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை செலவுசெய்து நெல் சாகுபடி செய்துள்ள நிலையில் தற்போது கூடுதலாக காசு கொடுத்து டிராக்டரில் தண்ணீர் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கூடுதல் செலவையும் ஈடுகட்ட முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குவதுடன் கருகிவரும் நெற்பயிர்களை காக்க வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.