கிறிஸ்துமஸ், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஓசூரில் இருந்து வெளிநாடுகளுக்கு 7 லட்சம் ரோஜா ஏற்றுமதி

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, பேரிகை, சூளகிரி, கெலமங்கலம், தளி உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் குளிர்ந்த சீதோஷ்ணநிலை காரணமாக 475 ஹெக்டேர் பரப்பளவில் பசுமைக் குடில் அமைத்து விவசாயிகள் ரோஜா மலர் சாகுபடி செய்து வருகின்றனர்.

இங்கு சாகுபடி செய்யப்படும் தரமான ரோஜா மலர்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளதால், பெங்களூரு வர்த்தக மையம் மூலமாக, சிங்கப்பூர், மலேசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.

குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் இங்கிருந்து ரோஜா மலர்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா காலங்களில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்புவரை 30 முதல் 40 லட்சம் மலர்களும், காதலர் தினத்துக்கு ரூ.1 கோடி மலர்களும் ஏற்றுமதியானது.

கடந்த 2015-ம் ஆண்டு முதல் உற்பத்தி பாதிப்பு, மழையின்மை, வறட்சி, பணமதிப்பிழப்பு, கரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெளிநாடுகளுக்கு ரோஜா மலர் ஏற்றுமதி படிப்படியாக சரிந்துவருகிறது. இந்நிலையில் புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்படாததால், வெளிநாடுகளில் ஓசூர் மலர்கள் மீதான கவன ஈர்ப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக ஏற்றுமதி சரிந்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக தேசிய தோட்டக்கலைத் துறை வாரிய இயக்குநர் பாலசிவபிரசாத் கூறும்போது, நெதர்லாந்து, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ரோஜா மலர் சாகுபடி அதிகரித்துள்ளது. அங்கு ஒவ்வொரு ஆண்டும், புது, புது ரகங்களில் மலர் சாகுபடி செய்கின்றனர்.

ஓசூர் பகுதிகளில் கடந்த 15ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட தாஜ்மஹால் ரக ரோஜா மலர்கள் மட்டுமே, வெளிநாட்டு சந்தையில் போட்டியிடும் நிலை உள்ளது. ஆனால் புதுவகையான ரோஜா ரகங்கள் இல்லாததால் நமது மலர்கள் மீதான ஈர்ப்பு குறைந்துள்ளது. வழக்கமாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலங்களில் 15 லட்சம் மலர்கள் ஏற்றுமதியாகும். நிகழாண்டில் 5 முதல் 7 லட்சம் ரோஜாமலர் ஏற்றுமதியாகி உள்ளது.

மத்திய அரசு மலர்களுக்கான கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், தமிழகத்தில் ரூ.5,990 கோடி நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரோஜா உள்ளிட்ட மலர்கள் ஆராய்ச்சி மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்த பயன்படுத்தலாம். இல்லாவிட்டால், வெளிநாடு மலர் சந்தைகளில் நம் நாட்டு மலர்களுக்கான வரவேற்பு இல்லாமல் எதிர்காலத்தில் ஏற்றுமதி முற்றிலும் பாதிக்கப்படும். இதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.