அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டத்தில் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் பண்பாட்டுப் பேரமைப்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பின் தலைவர் சீனி.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
மேலும், ஒருங்கிணைப்பாளர் நல்லப்பன் கூட்டத்தில் கலந்து கொண்டு சங்க செயல்பாடுகள் மற்றும் கடந்தாண்டு புத்தகத் திருவிழாவின் வரவு செலவு குறித்து பேசினார். இதைத்தொடர்ந்து, வரும் ஆண்டுகளில் தமிழக அரசு சார்பில் அரியலூரில் நடத்தப்படும் புத்தகத் திருவிழாவில், அரியலூரில் 6 ஆண்டுகளாக புத்தகத் திருவிழா நடத்தி வரும் தமிழப் பண்பாட்டுப் பேரமைப்பையும், பப்பாசியையும் இணைத்துக் கொள்ள தமிழக அரசிடம் வலியுறுத்துவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், புத்தகத் திருவிழாவில் அமைச்சர் உதயநிதியை அழைப்பது, பேரமைப்பு சார்பில் இனி வரும் காலங்களில் கருத் தரங்கு, கலைநிகழ்ச்சி, போட்டிகள் உள்ளிட்டவைகள் நடத்துவது, அரியலூர் அல்லது ஜெயங்கொண்டத்தில் சட்டக் கல்லூரி அமைக்க வலியுறுத்துவது என்று பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில், துணைத் தலைவர் புலவர் இளங்கோவன், பொருளாளர் புகழேந்தி, செய்தித் தொடர்பாளர் தமிழ் களம் இளவரசன், நிர்வாகிகள் சிவக்கொழுந்து, செந்துறை அய்யம்பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.