சென்னை எழும்பூர் ரயில் நிலைய கட்டடம் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தொன்மை வாய்ந்ததாகும். 144 ஆண்டுகள் கடந்தும் எழில் வனப்புடன் விளங்குகிறது. நாள்தோறும் 562 ரயில்கள் கையாளப்படுகின்றன. முக்கியமான நேரங்களில் ஒரே நேரத்தில் 24,600 பயணிகள் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்துகின்றனர். இங்கு பயணிகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் மறு சீரமைப்பு செய்யப்பட இருக்கிறது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூபாய் 734.91 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் செய்ய ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. பணிகளை 36 மாதத்திற்குள் நிறைவு செய்ய வேண்டும் என அக்டோபர் ஏழு அன்று ஒப்பந்த ஆணை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த பணிகளை மும்பையைச் சேர்ந்த நிறுவனம் கண்காணிக்க இருக்கிறது.




இந்த ரயில் நிலையத்தின் பிரதான முகப்பு காந்தி இரவின் சாலையிலும் பின்புறப் பகுதி பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் முடிவடைகிறது. இந்த இரு பகுதியிலும் ரயில்வே விரிவாக்க மற்றும் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. 1,35,406 சதுர மீட்டருக்கு ரயில் நிலையக் கட்டடம் புதியதாக அமைய இருக்கிறது. காந்தி இரவின் சாலை பகுதியிலும் பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியிலும் 3 மாடி கட்டடங்கள் கட்டப்பட இருக்கின்றன.
பயணிகள் வருகை புறப்பாடு ஆகியவற்றிற்கு தனித்தனியாக அரங்குகள் பார்சல்களை கையாள தனிப்பகுதி நடை மேம்பாலங்கள் அடுக்கக வாகன காப்பகங்கள் ஆகியவை அமைய இருக்கின்றன. தற்போதுள்ள கட்டடமும் புனரமைப்பு செய்யப்பட உள்ளது. பயணிகள் காத்திருப்பு பகுதியில் இருந்து நடைமேடைகளுக்கு செல்ல மின் தூக்கி, எஸ்கலேட்டர் ஆகியவை அமைய இருக்கின்றன.

விமான நிலையத்தில் இருப்பது போல பயணிகள் வருகை புறப்பாடு தனித்தனியாக பிரிக்கப்பட்டு நடைமேடை காத்திருப்பு அரங்கு வெளிப்புறப் பகுதி ஆகியவற்றிற்கு எளிதாக செல்லும் வகையில் அமைக்கப்பட இருக்கிறது. ரயில் நிலையம் அருகே உள்ள நகரப் பகுதியை பயன்படுத்தும் மக்களுக்கும் இணக்கமாக இருக்கும் வகையில் மறுசீரமைப்பு பணிகள் அமைய இருக்கின்றன.
பொது மற்றும் தனியார் வாகனங்களில் வரும் பயணிகள் தங்கு தடையின்றி ரயில் நிலையத்திற்கு சென்று வரும் வகையில் வெளிவளாகப் பகுதி அமைய இருக்கிறது. பெருகிவரும் போக்குவரத்து தேவைகளுக்கு ஏற்ப வருங்காலத்தை கருத்தில் கொண்டு கட்டுமானம் அமையும். மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து பயணிகளும் பயன்படுத்தும் வகையில் கழிவறைகள், குடிதண்ணீர் குழாய்கள், குளிர் குடிநீர் வசதி, மேற்கூரைகள், இருக்கைகள், லிஃப்ட், எஸ்கலேட்டர் போன்ற அடிப்படை வசதிகள் அமைக்கப்பட இருக்கின்றன.

கார்கள், வாடகை கார்கள், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் ஆட்டோ ரிக்ஷாக்கள் ஆகியவை நிறுத்தும் வகையில் அடுக்கக வாகன காப்பகங்கள் அமைய இருக்கின்றன. உள்ளே வரவும் மற்றும் வெளியே செல்ல வாகனங்கள் தங்கு தடையின்றி சென்று வர தனித்தனி பகுதிகள் வரையறுக்கப்பட இருக்கின்றன. பயணிகள் தனித்தனி பகுதிகளில் இருந்து வந்து சேர மூன்று நடை மேம்பாலங்கள் அமைய இருக்கின்றன.
மரங்கள் மற்றும் பயன்பாட்டு பகுதி, நிலப்பரப்பு கணக்கெடுப்பு, பார்சல் அலுவலகம் நடை மேம்பாலங்கள் காத்திருப்பு அரங்கு இருபுறமும் அடுக்கக வாகன காப்பகம் அமைய நிலப்பரப்பு தேர்வு, மண் பரிசோதனைக்காக பல்வேறு இடங்களில் ஆழ்துளை சோதனை, கட்டுமான நிறுவன அலுவலகம் கட்டுதல், கழுகு பார்வை கணக்கெடுப்பு, பணிக்காக அருகிலுள்ள ரயில்வே குடியிருப்புகளை அகற்றுவது போன்ற பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.