சென்னை: சீனா உள்ளிட்ட நாடுகளில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக மருத்துவமனைகளில் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும், உதவியாளர்களுக்கு கரோனா வார்டில் அனுமதி இல்லை என்றும் சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
அனைத்து மாநிலங்களும் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், மருத்துவமனையில் மருத்துவ பணியாளர்கள், நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உதவியாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி அனைத்து மருத்துவப் பணியாளர்களும் மருத்துவமனையில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவ மாணவர்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும், மருத்துவக் கல்லூரிகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், உதவியாளர்கள் மாஸ்க் அணிந்து கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், உதவியாளர்களுக்கு கரோனா வார்டுக்குள் அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.