சுஷாந்த் சிங் மரண வழக்கு: "இது தற்கொலை அல்ல கொலை!"- அதிர்ச்சி தந்த உடற்கூராய்வாளர்

தோனியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் மூலம் பிரபலமான நடிகர் சுஷாந்த் சிங் (34). இவர் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி, தான் தங்கியிருந்த அபார்ட்மண்ட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். செய்தியறிந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், சிபிஐ இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதையடுத்து சுஷாந்த் சிங் மரணம், தற்கொலை அல்ல கொலை என்று சுஷாந்த் சிங்கின் நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் குற்றம் சாட்டினர். இந்த விவகாரத்தில் பல முக்கிய பாலிவுட் பிரபலங்களின் பெயர்களும் அடிபட்டன. போதை மருந்து, நெப்போடிசம் உள்ளிட்ட விவாதங்களை இது கிளப்பியது. இருப்பினும், இந்த விவகாரம் இன்னும் பெரும் மர்மமாகவே இருக்கிறது.

சுஷாந்த்

இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் பிரேதத்தை உடற்கூராய்வு செய்த ரூப்குமார் ஷா, சுஷாந்த் சிங்கின் மரணம் தற்கொலை அல்ல கொலை என்று கூறியுள்ளார்.

இது பற்றிப் பேசியுள்ள அவர், “சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்தபோது, பிரேதப் பரிசோதனைக்காக ஐந்து உடல்கள் கூப்பர் மருத்துவமனையில் இருந்தன. அந்த ஐந்து உடல்களைத் தவிர அங்கு இருந்த ஒரு உடல் விஐபி-யின் உடல். அதை உடற்கூராய்வு செய்த போதுதான் அது சுஷாந்த் சிங்கின் உடல் என்று அறிந்தோம். அந்த உடலில் சில காயங்களின் தடயங்கள் இருந்தன, கழுத்திலும் இரண்டு மூன்று காயங்களின் தடயங்கள் இருந்தன. அதைப் பிரேதப் பரிசோதனை ஆய்வில் பதிவு செய்யவேண்டும்.

சுஷாந்த் சிங் ராஜ்புத்

ஆனால், எங்களின் உயர் அதிகாரிகள் உடலை போட்டோ மட்டும் எடுத்தால் போதும் என்று கட்டளையிட்டனர், எனவே அதன்படி செய்தோம். சுஷாந்த் சிங்கின் உடலைப் பார்த்த உடனே இது தற்கொலை அல்ல கொலைதான் என்பதை நான் உணர்ந்தேன். அதை எனது உயர் அதிகாரிகளிடமும் தெரிவித்தேன். இதில் நாம் முறையான விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் வலியுறுத்தினேன். ஆனால், எங்கள் உயர் அதிகாரிகள் போட்டோ மட்டும் எடுத்துவிட்டு உடலைக் காவல்துறையிடம் சீக்கிரம் ஒப்படையுங்கள் என்று கட்டளையிட்டனர். எனவே, இரவில்தான் பிரேதப் பரிசோதனை செய்தோம்” என்று கூறியுள்ளார்.

இது தற்போது மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.