திருமலை: வனப்பகுதி வழியாக சென்ற தங்க நகை வியாபாரிகளை வழிமறித்து சரமாரியாக தாக்கிய கும்பல் நகை, பணத்துடன் அவர்களது காரில் தப்பினர். சிறிது தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரை மீட்ட போலீசார் அந்த கும்பலை தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் நரசராவ்பேட்டையை சேர்ந்த தங்க வியாபாரிகள் 4 பேர் நேற்று முன்தினம் இரவு நந்தியாலாவில் இருந்து நரசராவ்பேட்டைக்கு காரில் புறப்பட்டனர். நல்லமல்லா வனப்பகுதியில் உள்ள சோதனைச் சாவடியை கடந்து சிறிது தூரம் சென்றபோது இவர்களை பின்தொடர்ந்து காரில் வந்த 6பேர் கும்பல் திடீரென வழிமறித்தனர்.
பின்னர், கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய அந்த கும்பல், வியாபாரிகளை சரமாரி தாக்கினர். பின்னர், வியாபாரிகள் 4 பேரையும் கீழே தள்ளிய அந்த கும்பல், வியாபாரிகள் வந்த காரையும் எடுத்துச்சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள், நந்தியாலா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் உடனடியாக சம்பவ இடம் வந்து வியாபாரிகளிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கொள்ளையர்கள் சென்ற வழியாக போலீசார் விரைந்தனர்.
அப்போது வனப்பகுதியில் கே.எஸ்.பள்ளே என்ற இடம் அருகே வியாபாரிகளின் கார் நிறுத்தப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
காரை போலீசார் சோதனை செய்தனர். காரில் உள்ள லாக்கரை வியாபாரிகளின் உதவியுடன் திறந்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.45 லட்சம் ரொக்கம் மற்றும் 950 கிராம் நகைகள் கொள்ளையர்களிடம் சிக்காமல் தப்பியது தெரிய வந்தது. காரில் உள்ள லாக்கரை திறக்க முடியாததால் இந்த நகை, பணம் தப்பியுள்ளது. இதுகுறித்து வியாபாரிகள் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 6 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.