திட்டக்குடி அருகே பரபரப்பு: திடீரென தீப்பிடித்து எரிந்த வேன் சென்னை பக்தர்கள் உயிர் தப்பினர்

திட்டக்குடி: சபரிமலையில் இருந்து சொந்த ஊர் திரும்பிய ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக வேனில் பயணம் செய்த அனைவரும் உயிர் தப்பினர். சென்னை அண்ணா நகரில் இருந்து கடந்த 22ம் தேதி ஐயப்ப பக்தர்கள் 8 பேர் ஐயப்பன் கோயிலுக்கு சென்றனர். அங்கு தரிசனம் முடித்துவிட்டு பக்தர்கள் நந்தகுமார்(30), பிரவீன்(41), ராஜகோபால்(33), அனீஸ்(28), சரிப்(42), காந்தி(55), பந்தல் ராஜன்(48), நரேஷ் (37) ஆகியோர் மீண்டும் நேற்று சொந்த ஊர் திரும்பினர். வேனை சுதாகர் (38) என்பவர் ஓட்டினார். பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே உள்ள ஓட்டலில் காலை உணவு சாப்பிட்டு விட்டு ஊர் திரும்பினர்.

கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்துள்ள வெங்கனூர் அருகே வந்தபோது, வேனின் முன் பகுதியில் உள்ள இன்ஜினில் இருந்து புகை வந்துள்ளது. உடனடியாக வேன் ஓட்டுநர் சுதாகர் வேனை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக நிறுத்தினார். உடனடியாக வண்டியில் பயணம் செய்த 8 ஐயப்ப பக்தர்களும் அலறி அடித்துக்கொண்டு கீழே இறங்கி ஓடினர். அடுத்த சில நொடிகளில் வேன் தீ பற்றி எரிந்தது. தீ வேன் முழுவதும் பரவியது.

இது குறித்த தகவலின் பேரில் திட்டக்குடி மற்றும் வேப்பூர் பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அதற்குள் வேன் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடு போல் காட்சி அளித்தது. தகவல் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வேப்பூர் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், ராமநத்தம் சப்- இன்ஸ்பெக்டர் கோபிநாத் ஆகியோர் தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வேனில் பயணம் செய்த அனைவரும் மாற்று வாகனம் மூலம் சொந்த ஊர் திரும்பினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.