`பரந்தூரில் விமான நிலையம் அமைந்தால் சென்னைக்கு வெள்ள அபாயமா?' – சூழலியலாளர்கள் சொல்வதென்ன?

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக அந்தப் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் 150 நாள்களுக்கும் மேலாகப் போராடிவருகின்றனர். அதேசமயம் மத்திய, மாநில அரசுகள் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான வேலைப்பாடுகளில் மிகத்தீவிரமாக இயங்கி வருகின்றன.

விமான நிலையம்

இந்தச் சூழலில், பரந்தூர் விமான நிலையத்தால் பல்வேறு சூழலியல் சிக்கல்கள் ஏற்படும் என பல்வேறு தரப்பினர் அச்சம் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, சமீபத்தில் `மாண்டஸ்’ புயலின்போது பெய்த மழையால் பரந்தூர் பகுதி முழுக்க வெள்ளக்காடாகக் காட்சியளித்தது. அந்த வீடியோக்கள் சமூக வளைதளங்களில் வைரலாக, `இந்த நீர்நிலைப் பகுதியில்தான் விமான நிலையம் அமைக்கப்போகிறீர்களா?’ என பலரும் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில், `பரந்தூர் விமான நிலையக் கட்டுமானங்களால் சென்னைக்கு வெள்ள அபாயம் ஏற்படும்’ என ஓய்வு பெற்ற நீதிபதி, சூழலியல் ஆய்வாளர்கள் உட்பட 30 பேர் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

தடைபடும் பரந்தூர் கம்பன் கால்வாய்:

“பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்படவிருக்கும் 4,563 ஏக்கரில் 2,446 ஏக்கர் பகுதி நீர்நிலையாகவும், 1,317 ஏக்கர் புறம்போக்கு நிலமாகவும் உள்ளது. அதில், கம்பன் கால்வாய் என்பது மிக முக்கியமான கால்வாய். சென்னை மக்களுக்கு தண்ணீர் அளிக்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு கம்பன் கால்வாயிலிருந்து தண்ணீர் செல்கிறது. இந்த திட்டத்தால் கம்பன் கால்வாயும் சூறையாடப்படும்” என்கிறார்கள் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளர்கள்.

பூவுலகின் நண்பர்கள்

இது குறித்து மேலும், “சென்னையில் வெள்ளம் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம், சென்னையின் மேற்குப்பக்கம் உள்ள மாவட்டங்களில் பெய்யும் மழைப் பொழிவுதான். சென்னைக்கு மேற்கே உள்ள 4,000-க்கும் மேற்பட்ட நீர்நிலைகளை தூர்வாரி முழுமையாகப் பயன்படுத்தினாலே சுமார் 100 டி.எம்.சி-க்கும் மேல் தண்ணீரை சேமிக்க முடியும், வெள்ளம் ஏற்படாமலும் தடுக்க முடியும்” என்கிறார் பேராசிரியர் ஜனகராஜன். இவர் சென்னை வெள்ளத்தடுப்பு நிபுணர் குழுவின் உறுப்பினர்.

“இன்றைக்குக் காலநிலை மாற்றம் கொண்டுவரக்கூடிய `குறைந்த கால இடைவெளியில் அதிதீவிர மழைப்பொழிவு’ போன்ற விஷயங்களை சமாளிப்பதற்கு நீர்நிலைகள், நீர்வழிப்பாதைகளை பாதுகாப்பது அவசியம். கம்பன் கால்வாய் போன்ற மூன்றாம் நிலை ஓடைகள்தான் (3rd order stream ) ஆறுகளில் ஓடும் 80% நீரை கொண்டுள்ளன” என்கிறார்கள் நீரியல் நிபுணர்கள்.

செம்பரம்பாக்கம் ஏரி

நிலைமை இப்படியிருக்க, “காவேரிப்பாக்கம் பாலாற்று அணையிலிருந்து தொடங்கி பல்லவ அரசன் கம்பவர்மனால் உருவாக்கப்பட்டு 43 கி.மீ தூரம் கடந்து திருப்பெரும்புதூர் ஏரியை அடைகிறது. இந்த நீர் திருப்பெரும்புதூர் ஏரியை அடையும் முன்னர் 85 ஏரிகளை நிரப்பி சென்னையின் குடிநீர் ஆதாரமாகவும், வெள்ளம் ஏற்படாமலும் தடுக்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்குச் செல்லும் கம்பன் கால்வாய் அழிக்கப்பட்டால் அது மிகப்பெரிய விளைவுகளை உருவாக்கும்” என எச்சரிக்கிறார்கள் பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர்.

அடையாற்றில் வெள்ளம் ஏற்படும்; சென்னை மூழ்கும்:

அதேபோல, பரந்தூர் விமான நிலையக் கட்டுமானங்களால் சென்னைக்கு வெள்ளம் எற்படும் அபாயம் இருப்பதாகவும், இந்த திட்டத்தை உடனடியாகக் கைவிடவேண்டும் எனக்கோரியும் `தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு’ ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன், நடிகர் சித்தார்த், கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா, சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் நித்தியானந்த் ஜெயராமன் உள்ளிட்ட 30 பேர் ஒரு திறந்த கடிதத்தை எழுதியிருக்கின்றனர்.

பரந்தூர் விமான நிலையம் வளர்ச்சியா? வீழ்ச்சியா?

அதில், “பரந்தூர் விமான நிலையம் அமைக்கக் கட்டுமானங்கள் ஏற்படுத்த இருக்கும் நிலம், அடையாற்றின் தென்மேற்கு நீர்பிடிப்புப் பகுதியின் 500 சதுர கிமீ பரப்புக்குள் அமைந்திருக்கிறது. இந்தப் பகுதியிலிருந்து வரும் நீர், செம்பரம்பாக்கத்திலிருந்து வெளியேறும் நீருடன் அடையாற்றில் சேருகிறது. அதனால்தான் கடந்த 2015-ம் ஆண்டு மணிமங்கலம், பெருங்களத்தூர், தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம் போன்ற பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இது தொடர்பாக இந்திய அறிவியல் நிறுவனம் (Indian Institute of Science), பல்துறை இடையிலானநீர் ஆராய்ச்சி மையம் (Inter disciplinary Center for Water Research) ஆகியவை நடத்திய ஆய்வில், கடந்த 2015 வெள்ளத்தில் செம்பரம்பாக்கம் ஏரி மட்டுமல்லாது, மற்ற காரணிகளும் முக்கிய பங்காற்றின எனத் தெரிவித்துள்ளது.

அடையாறு

மேலும், அன்று செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேறிய நீரின் அளவு வினாடிக்கு 800 கன மீட்டர். செம்பரம்பாக்கத்தின் தாக்கத்துக்கு ஆளாகாத மணிமங்கலம், பெருங்களத்தூர், தாம்பரம் போன்ற இணையான நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து விநாடிக்கு 3,000 கன மீட்டர் நீர்வெளியேறியது. இரண்டும் சேர்ந்து அடையாறு வழியாக மாநகருக்குள் நுழையும்போது 3,800 கன மீட்டராக (1,34,000) இருந்தது.

சென்னை வெள்ளம்

அடையாற்றின் கொள்ளளவு விநாடிக்கு 2,028 கன மீட்டர் மட்டுமே என அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது பரந்தூர் விமான நிலையம் அமையவிருக்கும் இடம் உள்ளடக்கிய பகுதியிலிருந்து 3,000 கன மீட்டர் நீர் அடையாற்றுக்கு வந்துள்ளது. அடையாற்றின் கொள் திறனை அதிகரிக்க முடியாது. நீரியல் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் ஆற்றின் கரையில் 18 சதுர கிமீ பரப்பில், நீர் மண்ணுக்குள் ஊடுருவ முடியாத தளத்தை ஏற்படுத்துவது பேரிடரை கூவி அழைப்பதற்கு ஒப்பாகும்” எனத் தெரிவித்திருக்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.