புதுச்சேரி: புதுச்சேரிக்கு நேற்று அரசு முறை பயணமாக வருகை புரிந்த ஒன்றிய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், சுகாதாரத்துறை இயக்குநர் ராமுலு, ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால், டாக்டர் ரமேஷ் மற்றும் ஜிப்மர், இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி, புதுவை அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளிலிருந்து மருத்துவ அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அப்போது, ஒன்றிய இணை அமைச்சரிடம் முதல்வர் ரங்கசாமி அளித்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:- ஒன்றிய சுகாதார அமைச்சகத்தால் புதுச்சேரி அரசுக்கு வழங்கப்பட்ட அனைத்து உதவிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சுகாதாரத்துறையின் கீழ் புதுச்சேரியில் அனைத்து தேசிய சுகாதார திட்டங்களும் வெற்றிகரமாக செயல்படுத்தி மத்திய அரசு நிர்ணயித்த இலக்கை நிறைவேற்றி உள்ளோம். புதுவையில் மருத்துவ சேவையை மேம்படுத்தவும், மருத்துவ கல்வி மற்றும் மருத்துவ துறையில் சிறந்த விளங்கும் தேசிய மையமாக திகழவும், பின்வரும் வசதிகளை செய்து தருமாறு ஏற்கனவே மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
அதன்படி, புதுச்சேரியில் கதிரியக்க சிகிச்சை மையம், போதை தடுப்பு மையம், மருத்துவ பல்கலைக்கழகம், 200 படுக்கைகள் கொண்ட தொற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை மற்றும் மருந்து பூங்கா அமைத்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் பேசுகையில், கதிரியக்க சிகிச்சை மையம் அமைக்க ரூ.125 கோடியும், போதை தடுப்பு மையம் அமைக்க ரூ.120 கோடியும், தொற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை அமைக்க ரூ.200 கோடியும், மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க ரூ.500 கோடியும் வழங்க வேண்டும்.
என்ஆர்எச்எம் திட்டத்துக்கு ஒன்றிய அரசு 60:40 என்ற விகிதத்தில் நிதி வழங்குகிறது. மற்ற யூனியன் பிரதேசங்களை போல் புதுவைக்கும் என்ஆர்எச்எம் திட்டத்துக்கு 100 சதவீதம் நிதி வழங்க வேண்டும் என்றனர். இதை கேட்டறிந்த ஒன்றிய இணை அமைச்சர், இதுசம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.