மீண்டும் நீட்டிக்கப்பட்ட கால அவகாசம்; பான் – ஆதார் இணைப்பது எப்படி? ஏன் அவசியம்?

மார்ச், 31, 2023க்குள் பான் அட்டை மற்றும் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும். மக்கள் அனைவரும் கொடுக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் இணைக்காவிட்டால் பான் அட்டை எண் செயலற்றதாகிவிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. இதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது அடுத்தாண்டு மார்ச் 31 ஆம் தேதி ஆதார் – பான் எண் இணைப்புக்கு கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“இது கட்டாயம். தாமதம் செய்யாதீர்கள், இன்றே இணையுங்கள்” என பான் அட்டை வைத்திருக்கும் அனைவரும் கொடுக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் ஆதாருடன் இணைக்க வேண்டும். இல்லையென்றால் பான் அட்டை எண் செயலற்றதாகிவிடும் மற்றும் இணைக்கப்பட்ட நிதி பரிவர்த்தனைகள் நிறுத்தப்படும். மேலும், வருமான வரி நிலுவையில் உள்ள அனைத்து ரிட்டன்களும் செயலாக்கத்திலிருந்து நிறுத்தப்படும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

ஒரு சிலருக்கு இந்த இணைப்பு திட்டத்திலிருந்து விலக்கு உள்ளது. அசாம், ஜம்மு காஷ்மீர் மற்றும் மேகாலயாவில் தனியாக வசிப்பவர்; வருமான வரிச் சட்டம், 1961-இன் படி குடியுரிமை இல்லாதவர்; முந்தைய ஆண்டில் எந்த நேரத்திலும் எண்பது வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள்; இந்தியாவின் குடிமகனாக இல்லாதவர்கள் இந்த இணைப்பை செய்யத் தேவையில்லை.

image

பான் – ஆதார் இணைப்பிற்கான இறுதி நாள் மற்றும் கட்டணம்:

மத்திய நேரடி வரிகள் வாரியம் பான் – ஆதார் இணைப்பிற்கான இறுதி நாளை மார்ச் 31, 2022லிருந்து மார்ச் 31, 2023க்கு அதிகரித்துள்ளது. இந்த இணைப்பு சேவைக்கு 1,000 ரூபாய் செலுத்த வேண்டும். வருமான வரித்துறை எச்சரித்துள்ளபடி கொடுக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் பான் – ஆதாரை இணைக்காவிட்டால் பான் அட்டை எண் செயலற்றதாகிவிடும்.

பான் அட்டையின் தேவைகள்:

பான் அட்டையானது பத்து இலக்க எண்ணைக் கொண்டுள்ளது மற்றும் அனைத்து நிதி பரிவர்த்தனைகளையும் தொடங்குவதற்கு அவசியமானது. தனிநபர்களின் பான் அடையாளமானது வருமான வரித்துறையால் பண வரவு மற்றும் செலவுக் கணக்கைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

வருமான வரி செலுத்தும்போதும், வரியை திரும்பப் பெறும்போதும், வருமான வரித்துறையிடமிருந்து தகவல் பெறும்போதும் பான் எண் பயன்படுத்தப்படுகிறது. கூடுதலாக, வங்கிக்குப் பணத்தை மாற்றுதல், புதிய வாகனங்கள் வாங்குதல் போன்ற பல தேவைகள் உள்ளன. ரூ.50,000க்கு அதிகமான பெரிய பரிவர்த்தனைகளைத் தொடங்கவும் பான் அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. 
image
ஏன் பாண் – ஆதாருடன் இணைக்கப்படுகிறது?

1. தற்போதைய விதிமுறைகளின் கீழ் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைப்பதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. இணைத்தல் என்பது சட்டத் தேவைகளுக்கான ஒரு செயல்முறையாக இருந்தாலும், இந்த செயல்முறை அரசாங்கத்திற்கும் வரி செலுத்துவோருக்கும் நன்மை பயக்கும்.

2.ஆதார் எண் ஒரு தனிநபரின் அனைத்து நிதி தகவல்களையும் கொண்டுள்ளது. பெரிய பணப் பரிமாற்றங்கள் முதல் யுபிஐ வரை அனைத்து விவரங்களையும் இந்த அட்டை கொண்டுள்ளது. மேலும் ஆதாருடன் பான் எண்ணை இணைப்பது, வரி செலுத்துவோர்களின் அனைத்து பரிவர்த்தனைகளையும், மோசடிகள் பற்றியும் அறிந்துகொள்வதற்கு வருமான வரித்துறைக்கு உதவும்.

3. பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது பல பான் அட்டைகளைக் கொண்டவர்களைக் கண்டறிய உதவுகிறது. இந்தியாவில் வசிப்பவர்களுக்கு ஒரே ஒரு ஆதார் மட்டுமே இருப்பதால், தனிநபர் ஒருவரின் பெயரில் ஒரு பான் அட்டையை மட்டுமே வைத்திருப்பதைக் கண்காணிக்கும்.

4. பான் மற்றும் ஆதார் ஆகியவை வருமான வரி செலுத்தும் செயல்முறை மற்றும் சரிபார்ப்பை எளிதாக்கும். பயோமெட்ரிக் சரிபார்ப்பு உட்பட ஒரு நபரைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் ஆதார் வைத்திருப்பதால், இணைப்பானது விரைவான ரிட்டர்ன் தாக்கல் செயல்முறையைத் தொடங்கும்.
image
பான் – ஆதார் இணைப்பது எப்படி?

உங்கள் பான் – ஆதாரை இணையத்தில் இணைக்கலாம் அல்லது உங்களுடைய பதிவு செய்யப்பட்ட தொலைப்பேசி எண்ணிலிருந்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு SMS அனுப்பலாம். வருமான வரி போர்ட்டலுக்குச் சென்று தாமதக் கட்டணத்தைச் செலுத்தி இரண்டு அடையாள அட்டைகளையும் இணையத்தில் இணைக்கலாம். 

இணையத்தில் பான் – ஆதார் இணைக்க:

 incometax.gov.in/iec/foportal என்ற லிங்க்கில் செல்லவும்

 Quick links என்ற பிரிவின் கீழ் Link Aadhaar கிளிக் செய்யவும்

  இப்பொழுது உங்கள் பெயர், தொலைப்பேசி எண், ஆதார் எண் மற்றும் பான் எண்ணைக் கொடுக்கவும்

 I validate my Aadhaar details என்ற ஆப்ஷனை கிளிக் செய்து சரிபார்க்கவும்

 தொடரவும் என்று கிளிக் செய்து கொள்ளவும்

இப்பொழுது உங்கள் தொலைப்பேசி எண்ணுக்கு வந்துள்ள ஓடிபியை கொடுத்துச் சரி பார்க்கவும்

கட்டணத்தைச் செலுத்திய பின் பான் ஆதாருடன் இணைந்துவிடும். 

-ஷர்நிதாSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.