சண்டிகர்: விவசாயிகள் சங்க கூட்டமைப்பான சம்யுக்தா கிஸான் மோர்ச்சா (எஸ்கேஎம்), ஹரியாணா மாநிலத்தில் வரும் ஜனவரி மாதம் 26-ம் தேதி பெருந்திரள் விவசாய பேரணியை (கிஸான் மகா பஞ்சாயத்து) நடத்த முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
கர்னல் மாவட்டத்தில் எஸ்கேம் தலைவர்கள் அடங்கிய கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், ராகேஷ் டிகைத், தர்சன் பால், ஜோகிந்தர் சிங் உக்ராகன் உள்ளிட்ட பல முக்கிய விவசாய சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.
எஸ்கேஎம் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்துவெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விவசாயிகள் அடங்கிய மகாபஞ்சாயத்து பேரணியை வடமாநிலங்களில் வரும் ஜனவரி 26-ம்தேதி நடத்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. குடியரசு தின கொண்டாட்டத்தை அனுசரிக்கும் வகையிலும் இந்த பேரணி நடத்தப்படவுள்ளது. அதன் ஒருபகுதியாக, தேசிய கொடியை ஏற்றிய பிறகு, அரசு நிகழ்ச்சிகளுக்கு எந்தவித இடையூறுகளையும் விளைவிக்காமல் டிராக்டர் பேரணிகள் மற்றும் மாநாடுகளை நடத்தவும் விவசாயிகள் சார்பில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.