தமிழ்நாட்டு மக்களுக்கு தனி அடையாள அட்டை!

ஆதார் அடையாள அட்டை என்பது இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் 12 இலக்க அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும். நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடுதழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதே ஆதார் அடையாள எண் முறையின் நோக்கமாகும்.

ஆதாரில் கண்ணின் விழித்திரை, கைரேகை போன்றவற்றுடன் சேர்த்து பெயர், முகவரி, பிற சுய குறிப்புகளும், புள்ளி விவரங்களும் உள்ளீடு செய்யப்படும். பிற அடையாள அட்டைகளிலிருந்து முற்றிலும் தனிப்பட்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டையில் ஒருவருக்கு வழங்கப்படும் 12 இலக்க எண் ஒரு முறை ஒருவருக்கு வழங்கப்பட்டு விட்டால் வாழ்நாள் முழுவதும் அது அவருக்குரியதே. வேறு எவருக்கும் அந்த எண் வழங்கப்பட மாட்டது.

ஆதார் எண்ணிற்காக மக்களிடம் திரட்டப்படும் தகவல்கள் மிகவும் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசால் அறிவிக்கப்படும் பல்வேறு திட்டங்களின் பயன்களை பெறுவதற்கும், செல்போன் இணைப்பு உள்ளிட்ட கிட்டத்தட்ட அனைத்து சேவைகளை பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஆதார் அட்டை போன்று தமிழ்நாட்டு மக்களுக்கு தனி அடையாள அட்டை வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் கொண்ட மக்கள் ஐடி எனும் பெயர் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. The State Family Database – மாநில குடும்ப தரவுதளம் உருவாக்கப்பட்டு, தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு 10 – 12 இலக்கங்களினான Makkal ID அளிக்கப்படவுள்ளதாகவும், இதற்கான பணிகள் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூக நல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இந்த மக்கள் ஐடி எண் பயன்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது. மத்திய அரசின் ஆதார் எண் உள்ள நிலையில், மாநில அரசினால் தனி அடையாள எண் அளிக்கப்படவுள்ளது என்பதும், வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டு மக்களுக்கென பிரத்யேகமாக அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.