புதுடெல்லி: கரோனா தொற்றுக்கு மூக்கு வழியாக செலுத்தும் இரண்டு சொட்டு தடுப்பு மருந்தின் விலையை நிர்ணயித்துள்ளது பாரத் பயோடெக் நிறுவனம். iNCOVACC இன்கோவாக் என்ற அந்த மருந்தின் விலை கோவின் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஜிஎஸ்டி வரியில்லாமல் தனியார் சந்தையில் ரூ.800-க்கும், அரசாங்கத்திற்கு ஜிஎஸ்டி இல்லாமல் ரூ.325-க்கும் விநியோகிக்கப்படும். இந்த தடுப்பூசி ஜனவரி 2023 கடைசி வாரத்தில் இருந்து சந்தையில் புழக்கத்திற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
iNCOVACC இன்கோவாக் மூக்குவழி தடுப்பு மருந்தை கரோனா தடுப்பு மருந்து திட்டத்தில் சேர்க்க மத்திய அரசு அண்மையில்தான் அனுமதி அளித்துள்ளது. கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பு மருந்தாக மூக்குவழி தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளலாம் என அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூக்கு வழி தடுப்பு மருந்து என்பது இந்தியாவின் தடுப்பூசி ஆராய்ச்சியில் இன்னொரு மைல்கல் என்று கருதப்படுகிறது. இரண்டாவதாக இது செலுத்துவதற்கு எளிதானது. மூக்கின் வழியாகத் தான் கரோனா வைரஸ் பரவுகிறது என்பதால் இந்த தடுப்பு மருந்து மூக்கிலேயே ஒரு பாதுகாப்பு அரணை உருவாக்கும். 18 வயதைத் தாண்டியவர்களுக்கு இந்த தடுப்பு மருந்து பரிந்துரைக்கப்படுகிறது.