பவானிசாகர் அணையில் இப்படி ஒரு மாற்றம்… தடதடவென குறையும் நீர்மட்டம்!

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை விளங்குகிறது. இது 105 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி காணப்படுகிறது. இங்கு பெய்யும் மழையின் அளவை பொறுத்து அணைக்கு நீர்வரத்தும் மாறுபடும். தற்போதைய வடகிழக்கு பருவமழை காலத்தில் மழையின் தீவிரம் ஓரளவு நன்றாக இருந்தது.

வடகிழக்கு பருவமழை

மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் நல்ல மழைப்பொழிவு கிடைத்தது. இதனால் நீர்நிலைகள் நிரம்பும் வாய்ப்பு உருவானது. அந்த வகையில் பவானிசாகர் அணையின் நீர் மட்டமும் உயர்ந்தது. கடந்த சில வாரங்களாக நீலகிரி நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது.

பவானி ஆற்றில் உபரி நீர்

அணையின் பாதுகாப்பு கருதி பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதையொட்டி பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. தற்போது நீலகிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லை.

பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று (டிசம்பர் 30) காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.10 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 968 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

வெளியேற்றப்படும் தண்ணீர்

அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2 ஆயிரம் கன அடி நீரும், பவானி ஆற்றில் 100 கன அடி நீரும், தடப்பள்ளி – அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடி நீரும் என மொத்தம் 2,900 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணையின் பின்னணி

நாடு சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது பவானிசாகர் அணை. 1955ல் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. இது ஒரு மண்ணால் கட்டப்பட்ட அணையாகும். ஈரோட்டில் பாயும் பவானி ஆற்றுடன் நீலகிரியில் இருந்து வரும் மோயாறு கலக்கும் இடத்தில் கீழ்பவானி திட்டம் மூலம் அணை கட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக சத்தியமங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட கொத்தமங்கலம் கிராமத்தில் அணை அமைந்துள்ளது. இதன் உயரம் 105 அடி ஆகும். கொள்ளளவு 33 கோடி கன அடி. நீர்தேக்கத்தின் பரப்பளவு 30 சதுர மைல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அணையில் இருந்து செல்லும் கீழ் பவானி திட்ட கால்வாய் ஆனது ஈரோடு மாவட்டத்தை வளப்படுத்தி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.