'மேடைக்கு செல்ல மாட்டேன்..!' – பிரதமர் மோடி நிகழ்ச்சியில் அடம்பிடித்த மம்தா பானர்ஜி

வந்தே பாரத் ரயில் தொடக்க நிகழ்ச்சியில் மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மேடை ஏற மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா – நியூ ஜல்பைகுரி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை துவக்க விழாவில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்து கொள்வதாக இருந்தது.

தனது தாயார் ஹீராபென் மறைவு காரணமாக அவரால் நேரில் கலந்து கொள்ள முடியவில்லை. எனினும், தாயின் இறுதிச் சடங்கு முடிந்த சில மணி நேரங்களிலேயே பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்காக கடமை ஆற்றியது அனைவரையும் நெகிழ்ச்சியில் உறைய வைத்தது.

வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி கூறியதாவது:

உங்கள் தாயாரின் மறைவுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என தெரியவில்லை. உங்களின் தாயார் எங்களுக்கும் தாயார் தான். இந்த நேரத்தில் எனது தாயாரை நினைத்து பார்க்கிறேன். தொடர்ந்து பணியாற்ற கடவுள் உங்களுக்கு நல்ல பலத்தை கொடுக்க வேண்டும். தயவு செய்து கொஞ்சம் ஓய்வு எடுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, வந்தே ரயில் சேவை துவக்க விழாவில், பாஜக தொண்டர்கள் “ஜெய் ஸ்ரீ ராம்” என கோஷம் எழுப்பினர். இதனால் அதிருப்தி அடைந்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி மேடையில் ஏற மறுத்து விட்டார். ரயில் நிலையத்தின் நடைமேடையிலேயே நின்றார்.

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மேற்கு வங்க மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் ஆகியோர், முதலமைச்சர் மம்தா பானர்ஜியை மேடையில் ஏறும்படி சமாதானப்படுத்தினர். ஆனால், முதலமைச்சர் மம்தா பானர்ஜி மேடையில் ஏற மறுத்து விட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.