எதை செய்யக்கூடாது என்று எனக்கு கற்று கொடுத்த பா.ஜ.க தனது குரு என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராகுல்காந்தியின் ஒற்றுமை பயணம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காரணமாக ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தனது ஒற்றுமை பயணம் குறித்து ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர், பா.ஜ.க தலைமையிலான அரசு காரணமே இல்லாமல் தன் மீது வழக்கு போட முயற்சிக்கிறது என்று குற்றம்சாட்டினார்.
ஒற்றுமை பயணத்தை குண்டு துளைக்காத காரில் செய்ய வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அதை நான் எப்படி செய்வது? என்று கேள்வி எழுப்பிய ராகுல், இது ஒரு பாத யாத்திரை என்று கூறியுள்ளார்.
பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும் என்று அரசாங்கத்திற்கு தெரியும் என்று கூறிய அவர், தேவையின்றி பிரச்சினையை எழுப்புவதாக ராகுல் சாடியுள்ளார். பாஜக தலைவர்கள் திறந்த ஜீப்பில் ரோட்ஷோ நடத்தும்போது, நெறிமுறைகளுக்கு எதிராக, கடிதங்கள் எதுவும் அனுப்பப்படுவதில்லை என்று கூறியுள்ளார். ஆனால் ராகுல் காந்தி பாதுகாப்பை மீறியதாகக் கூறி வழக்கு போட முயற்சிக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.
நான் யாத்திரையை தொடங்கியபோது, எந்த முன்முடிவுமின்றி இன்றி பயணத்தை அனுபவிக்க தான் சென்றேன் என்றார். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, அது இந்தியாவின் உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கிறது என்றார், மேலும் நான் கற்பனை செய்ததை விட எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது என்று ராகுல் கூறியுள்ளார்.
எதிர்வரவிருக்கும் 2024 தேர்தலில், “எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால், தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது கடினமாகிவிடும் என்று ராகுல் தெரிவித்துள்ளார். எனது கவனம் முழுவதும் வெறுப்பு மற்றும் கோபத்தை எதிர்த்துப் போராடுவதில் உள்ளது என்று ராகுல் கூறியுள்ளார்.வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவை மக்கள் மத்தியில் அதிர்வலையைக் ஏற்படுத்தி உள்ளன என்று ராகுல் விமர்சித்துள்ளார்.
ஒவ்வொரு எதிர்க்கட்சித் தலைவரும் தேச ஒற்றுமை பயணத்தில், காங்கிரசுடன் கலந்து கொள்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு சில அரசியல் நிர்பந்தங்கள் உள்ளன என்பதை நான் புரிந்துகொள்கிறேன் என்றார்.
பாஜகவிடம் நிறைய பணம் உள்ளது என்று கூறிய ராகுல், அதை வைத்துக் கொண்டு உண்மையுடன் போராட முடியாது என்றுகூறினார். பா.ஜ.க.வும் , ஆர்எஸ்எஸ்சும் என்னை கடுமையாக விமர்சிக்கின்றன என்று கூறிய அவர், அதுவே எனக்கு வழிகாட்டியாக இருப்பதுடன், தன்னை மேம்படுத்த உதவியாக இருக்கிறது என்றார்.
நான் அவர்களை எனது குருவாகக் கருதுகிறேன் என்று கூறிய ராகுல், அவர்கள் எதை செய்யக்கூடாது என்று எனக்கு கற்று கொடுக்கிறார்கள் என்றார்.
newstm.in