கோவை ஈஷா யோகா மையத்துக்கு டிசம்பர் 18 ஆம் தேதி பயிற்சிக்காக சென்ற இளம் பெண் சுபஸ்ரீ, அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது கணவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து காவல்துறையினர் 4 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று சுபஸ்ரீயின் உடல் ஈஷா யோகா மையத்துக்கு அருகாமையில் இருக்கும் கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்டது. அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சுபஸ்ரீ உடலைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதன் பின்னர் சுபஸ்ரீயின் உடல் அவசர அவசரமாக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு உடற்கூராய்வு செய்யப்பட்டு, குடும்பத்தினரிடம் இறுதி மரியாதைக்காக ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து கோவை மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி சில கேள்விகளை எழுப்பியுள்ளது. சுபஸ்ரீயின் உடல் அவசர அவசரமாக கூறாய்வு செய்யப்பட்டது ஏன்?, நீதிபதியின் விரிவான விசாரணைக்குப் பிறகே சுபஸ்ரீயின் உடலை உடற்கூராய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும், கடந்த 12 நாட்களாக சுபஸ்ரீக்கு என்ன நடந்தது? என்பது குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டது.
இதனை தமிழக அரசின் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் ஆமோதித்துள்ளார். தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் சுபஸ்ரீ மர்ம மரணம் குறித்த செய்திக்கும், இதன் பின்னணி குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை லைக் செய்துள்ளார். பிடிஆர் பழனிவேல் தியாகராஜனைப் பொறுத்தவரை திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே ஈஷா குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது வந்தது குறிப்பிடத்தக்கது.