தஞ்சை மாவட்டத்தை அடுத்த பாபநாசம் தாலுக்கா புளியக்குடி ஊராட்சி வடக்கு தோப்பு புளியங்குடியில் 300க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ரேஷன் பொருட்களை வாங்க 3 கிலோ மீட்டர் தூரம் ரயில்வே பாதை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இரு சக்கர வாகனத்தில் செல்ல வேண்டுமென்றால் 5 கிலோ மீட்டர் தூரம் சுட்டுச் செல்ல வேண்டி உள்ளது.
இதனால் வடக்கு தோப்பு புளியங்குடியில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் பொறுமை இழந்த ஊர் பொதுமக்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புளியங்குடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தலைமையில் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் மனு கொடுத்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நின்று திருவோடு ஏந்தி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தர வேண்டுமென கோஷம் எழுப்பினர். கையில் வைத்திருந்த திருவோட்டை தரையில் போட்டு உடைத்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். அப்பொழுது பெண் ஒருவருக்கு மயக்கம் ஏற்பட்டதால் திடீரென பரபரப்பானது. பொதுமக்களின் இந்த நூதன போராட்டத்தால் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.