“பணமதிப்பிழப்பு செல்லும் என்பதிலிருந்து மாறுபடுகிறேன்” – நீதிபதி நாகரத்னா மாறுபட்ட தீர்ப்பு

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி ஒரே இரவில், புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பணமதிப்பிழப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். கறுப்பு பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக முதலில் சொல்லப்பட்டது. இதனால் நாட்டுமக்கள் தங்களிடம் இருந்த சில ஆயிரம் ரூபாய்களை நீண்ட வரிசையில் நின்று மாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, பண மதிப்பு நீக்க நடவடிக்கையை எதிர்த்து 58 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது.

மோடி

இந்த வழக்குகளை நீதிபதி அப்துல் நாசிர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான பா. சிதம்பரம், ” பணமதிப்பு நீக்க அறிவிப்பில் அரசு பின்பற்றிய செயல்முறை குறைபாடு உடையது, மத்திய அரசின் நடவடிக்கை சட்டத்தைக் கேலிகூத்தாக்கியுள்ளது. ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின் அடிப்படையில் தான் பணமதிப்பிழப்பு செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், அதற்கு பதிலாக இங்கு தலைக்கீழான நடைமுறை பின்பற்றப்பட்டிருக்கிறது. அதனால், பணமதிப்பு நீக்க நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.

இந்த வழக்கு விசாரணையில் ரிசர்வ் வங்கி, “பணமதிப்பிழப்பின்போது சில கஷ்டம் இருந்ததை ஒப்புக் கொள்கிறோம். இருப்பினும் அவை தேசத்தை கட்டி எழுப்பும் செயல்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதி. மேலும், இது மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை முடிவு என்பதால் நீதிமன்றம் இதில் தலையிட முடியாது” என வாதிட்டிருந்தது.

ப.சிதம்பரம்

இதற்கு பதிலளித்த நீதிபதிகள், “பொருளாதாரக் கொள்கை முடிவுகள் எனக் கூறி எங்களை கட்டிப்போட முடியாது. பொருளாதாரம் சார்ந்த முடிவு என்பதற்காக, அது செயல்படுத்தப்படும் விதங்களை நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம்” என கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், மத்திய அரசு சமர்பித்த பிரமாண பத்திரத்தில், “பணமதிப்பிழப்பு நடவடிக்கை நன்கு பரிசீலிக்கப்பட்ட பின் எடுத்த முடிவு. போலி ரூபாய் நோட்டுகள், பயங்கரவாதத்துக்கு நிதி செல்வது, கறுப்பு பணம் மற்றும் வரி ஏற்பு ஆகியவற்றை எதிர்த்து போராடுவதற்கான ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியே இந்த பணமதிப்பிழப்பு. அதேபோல பொருளாதார ரீதியாக இந்தியாவுக்கு நல்ல பலன்கள் இதனால் ஏற்பட்டிருக்கிறது. எனவே, பண மதிப்பிழப்பை தோல்வி எனக் கருத முடியாது” என தெரிவித்திருந்தது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை

இந்த வழக்கின் வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்திருந்த நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்துல் நசீர் தலைமையிலான நீதிபதிளின் அரசியல் சாசன அமர்வில் 4 நீதிபதிகள் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக தீர்ப்பளித்திருக்கின்றனர்.

அதில், “சரியாக ஆலோசித்து மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. அதே போல எல்லா பணத்தையும் மதிப்பிழப்பு செய்யாமல் குறிப்பிட்ட தொகையை மட்டும்தான் மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. பொருளாதார நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசுக்கு முழு அதிகாரம் இருக்கிறது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கியிடமும் மத்திய அரசு ஆலோசித்திருப்பதை கவனிக்க முடிகிறது. எனவே, பணமதிப்பிழப்பு முடிவை இனி திரும்பப் பெற முடியாது. அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம். பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்.” எனத் தீர்ப்பளித்திருக்கிறார்கள்.

நீதிபதி நாகரத்னா

இந்த தீர்ப்பிலிருந்து மாறுபட்ட கருத்து தெரிவித்த நீதிபதி நாகரத்னா, “பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்ற தீர்ப்பில் மாறுபடுகிறேன். பணமதிப்பிழப்பு நடவடிக்கை ரகசியமாக செய்ய வேண்டுமென மத்திய அரசு கருதியிருந்தால், அதை அவசரச் சட்டம் மூலம் நிறைவேற்றி இருக்கலாமே? நாட்டின் மறு உருவமாக நாடாளுமன்றம் விளங்குகிறது. நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றிய பின்பே பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். மேலும் எந்த பரிசீலனையையும் மேற்கொள்ளாமல், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்து இருக்கிறது. எனவே பண மதிப்பிழப்பு சரியே என்ற கருத்தில் இருந்து நான் மாறுபடுகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.