தமிழகத்தில் அரையாண்டு மற்றும் புத்தாண்டு விடுமுறை முடிந்து இன்று (ஜனவரி 2) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதாவது 6ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மட்டும் இன்று திறக்கப்படுகிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை வரும் 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி இருப்பதால் 5ஆம் வகுப்பு வரை மட்டும் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் தொடக்கப் பள்ளி மாணவர்கள் இன்னும் விடுமுறை மனநிலையில் தான் இருந்து வருகின்றனர். அதேசமயம் 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் நேற்று இரவு முதல் மீண்டும் தங்கள் ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். குறிப்பாக பல்வேறு ஊர்களில் இருந்து விடுமுறை முடிந்து இன்று காலை சென்னை திரும்பிய மக்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
