சென்னை: சென்னை மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருது, கர்னாடக இசைப் பாடகர் நெய்வேலி சந்தானகோபாலன் (2020), மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவத்சலம் (2021), வயலின் கலைஞர்கள் லால்குடி ஜிஜெஆர் கிருஷ்ணன், ஜிஜெஆர் விஜயலட்சுமி (2022) ஆகிய நான்கு பேருக்கு மியூசிக் அகாடமியின் 96-வது ஆண்டு இசை விழாவில் வழங்கப்பட்டது.
விழாவில் மும்பை டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி அவர் பேசியதாவது:
விளையாட்டு வீரரோ, பெரிய தொழிலதிபரோ, விடாமுயற்சி, பயிற்சி, புதுமைகளை வரவேற்கும் பக்குவம் ஆகிய மூன்றும் அவசியம். இது இசைக் கலைஞர்களுக்கும் பொருந்தும்.
எனக்கு சங்கீதம் கேள்வி ஞானம்தான். எம்எல்வி, மதுரை மணி அய்யர், சந்தானகோபாலன் இப்படிபலரது இசையையும் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். அதன் நுட்பங்கள் தெரியாவிட்டாலும், இனம்புரியாத ஆறுதலை எனக்கு எப்போதுமே கர்னாடக இசை தருகிறது.
‘‘கற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்’’ என்று, விருது பெற்ற கலைஞர்கள் இங்கு பேசும்போது கூறினர். புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்காக உலகின் பல நாடுகளுக்கும் சென்று வந்துதான் டாடா எனும் சாம்ராஜ்யத்தை அதன்நிறுவனர் உருவாக்கினார்.
சங்கீத கலாநிதி, சங்கீத கலா ஆச்சார்யா, டிடிகே விருது, இசை அறிஞர் உள்ளிட்ட விருதுகளைப் பெற்ற மூத்த கலைஞர்களும், மியூசிக் அகாடமியின் இதர பரிசுகளைப் பெற்ற இளம் கலைஞர்களுக்கும் பாராட்டுகள். தகுதியான கலைஞர்கள் என்பதற்கான அங்கீகாரம்தான் இந்த விருதுகள்.
96 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட மியூசிக் அகாடமி, பாரம்பரியத்துக்கும் நவீனத்துக்கும் பாலமாக செயல்படுகிறது. அதனால்தான் மியூசிக் அகாடமியால் கரோனா பேரிடர் காலத்தில் இணையவழியிலும் நிகழ்ச்சிகளை நடத்த முடிந்தது.
இவ்வாறு சந்திரசேகரன் பேசினார்.
முன்னதாக மியூசிக் அகாடமியின் தலைவர் ‘இந்து’ என்.முரளி, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட டாடா நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரனின் தொழில் திறமை, பன்முகத் திறமைகளை எடுத்துரைத்தார். விருது பெறும் கலைஞர்களை வரவேற்றுப் பேசினார்.
விருது பெற்ற கலைஞர்களை ‘சங்கீத கலாநிதி’ எஸ்.சௌம்யா வாழ்த்திப் பேசினார். விருது பெற்ற நெய்வேலி சந்தானகோபாலன், திருவாரூர் பக்தவத்சலம், லால்குடி ஜிஜெஆர் விஜயலட்சுமி ஆகியோர் ஏற்புரை வழங்கினர்.