
கிஷோர் கணக்கு முடக்கம் : தொடர்ந்து சர்சை பதிவால் டுவிட்டர் நிறுவனம் நடவடிக்கை
கர்நாடகத்தை சேர்ந்தவர் கிஷோர். கன்னட சினிமாவில் நடித்து வந்த இவர் பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன்பிறகு பல படங்களில் வில்லன், குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். வனயுத்தம் என்ற படத்தில் சந்தன கடத்தல் வீரப்பனாக நடித்தார். ஹரிதாஸ், கடிகார மனிதர்கள் உள்ளிட்ட சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். சமீபத்தில் ஓடிடியில் வெளியான பேட்டகாளி தொடரில் நாயகனாக நடித்திருந்தார்.
கிஷோர் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருப்பவர். சில மாதங்களுக்கு முன்பு காஷ்மீர் பண்டிட்கள் குறித்து நடிகை சாய் பல்லவியின் கருத்தை ஆதரித்து பதிவிட்டு விமர்சனத்திற்கு உள்ளானார். டில்லியில் நடந்து வந்த விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தும், மத்திய அரசை கடுமையாக விமர்சித்தும் பதிவிட்டு வந்தார்.
சமீபத்தில் தொழில் அதிபர் அதானி குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதானி ஒரு பிரபல மீடியாவை விலைக்-கு வாங்கிவிட்டதை குறிப்பிட்டு அன்றைய தினம் கருப்பு தினம் என்று கூறியிருந்தார். இதை தொடர்ந்து அதானி நிறுவனம் டுவிட்டர் நிறுவனத்தில் புகார் அளித்ததாக தெரிகிறது. அதன் அடிப்படையில் தற்போது கிஷோரின் டுவிட்டர் கணக்கை அந்த நிறுவனமே முடக்கி விட்டது. அவரை பின் தொடரும் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.