மதுரவாயில் அருகே தம்பி கண் முன்னே லாரி சக்கரத்தில் சிக்கி அக்கா உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை போரூரை சேர்ந்த ஷோபனா(22) என்பவர் கூடுவாஞ்சேரியில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார். இவரது தம்பி அரிஷ் (17) தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை ஷோபனா, தம்பியை மொபட்டில் பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்பொழுது மதுரவாயல் அருகே சென்றபோது, மொபட்டை முந்தி செல்ல முயன்ற வேன் ஒன்று மொபட் மீது உரசியதால் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். அப்பொழுது பின்னால் வந்த லாரி சக்கரம் ஷோபனா மீது ஏறி இறங்கியுள்ளது.
இதில் சம்பவ இடத்திலேயே ஷோபனா உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது தம்பி அரிஷ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், ஷோபனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய ஓட்டுநர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.