வாணியம்பாடி அருகே அதிவேக பேருந்து மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தால், ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் பேருந்து ஓட்டுனரை பிடித்து தர்ம அடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது..
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் – பானுமதி தம்பதியின் எட்டு வயது மகன் தரணி. மூன்றாம் வகுப்பு படித்து வந்த தரணி அரையாண்டு விடுமுறையை முன்னிட்டு தனது பாட்டி வீட்டுக்கு விடுமுறைக்காக சென்றிருந்தார்
புதன்கிழமை தனது ஊருக்கு திரும்புவதற்காக கலந்திரா கிராமத்தையொட்டிய தேசிய நெடுஞ்சாலையை கடந்து எதிர் திசையில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு சென்றனர். தாய் மற்றும் பாட்டி பின்னால் நடந்து வர சிறுவன் தரணி செண்டர் மீடியனை தாண்டி வேகமாக சாலையின் குறுக்கே சென்றதாகக் கூறப்படுகின்றது.
இதில் திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி வேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று சிறுவன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் தரணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
ஊர் பகுதி என்று தெரிந்தும் வேகத்தைக் குறைக்காமல் வந்ததால் இந்த விபத்து நிகழ்ந்து விட்டதாக கூறி ஆத்திரமடைந்த உறவினர்கள் பேருந்து கண்ணாடிகளை உடைத்து சாலைமறியலில் ஈடுபட்டனர். பேருந்தை ஓட்டி வந்த ஒடுக்கத்தூர் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் பாஸ்கருக்கும் அடி விழுந்தது
தப்பி ஓடிய ஓட்டுனர் பாஸ்கர் அந்தப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தஞ்சம் புகுந்த நிலையில் விடாமல் துரத்திச்சென்ற போராட்டக்காரர்கள் வீடு புகுந்து அவரை அடித்து உதைத்தனர், விரைந்து வந்த வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர்
காயத்துடன் அவதிப்பட்ட ஓட்டுநர் பாஸ்கரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர்.
விபத்து மற்றும் தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த பகுதியில் முறையான சர்வீஸ் சாலையோ சுரங்க பாலமோ இல்லை என்றும் அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்களால் சாலையை கடப்போர் விபத்தில் சிக்குவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.
அதே நேரத்தில் வாகன ஓட்டிகள் சாலைகளில் அந்தந்த பகுதிக்கு அனுமதிக்கப்பட்ட வேகத்துடன் நிதானமாக வாகனங்களை இயக்க வேண்டும், சிறுவர் சிறுமிகளுடன் சாலையை கடக்கும் பெற்றோரும், கவனமுடனும், பாதுகப்பாகவும் சாலையை கடப்பது எப்படி ? என்று பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பது இது போன்ற விபத்துக்களை தடுக்கும்