சென்னையில் மின்சாரம் தாக்கி வாட்டர் சர்வீஸ் கடை ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் சுமதி. இவரது மகன் ஆகாஷ்(20) கொடுங்கையூர் விவேகானந்தர் நகர் பகுதியில் உள்ள வாட்டர் சர்வீஸ் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ஆகாஷ் மோட்டார் சைக்கிளை வாட்டர் சர்வீஸ் செய்வதற்காக நேற்று மின் மோட்டார் சுவிட்சை ஆன் செய்துள்ளார்.
அப்பொழுது திடீரென மின்சாரம் தாக்கி ஆகாஷ் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதையடுத்து உடனடியாக ஆகாஷை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே ஆகாஷ் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் ஆகாசின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வாட்டர் சர்வீஸ் கடை உரிமையாளர் மீது கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.