திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியில் கஞ்சா விற்பனை அதிகமாக நடப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து போதை பொருள் தடுப்பு குற்றப்பிரிவு போலீஸார் நிலக்கோட்டை, வத்தலக்குண்டு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இதில் வத்தலகுண்டு பகுதிக்கு ஆந்திராவில் இருந்து காரில் கஞ்சா கடத்தி வரப்பட்டிருக்கும் தகவல் கிடைத்துள்ளது. விசாரணை நடத்தியதில் கஞ்சா கடத்தி வந்த கார் பட்டிவீரன்பட்டி பகுதியில் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் தனிப்படை போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். இதில் பட்டிவீரன்பட்டி அய்யங்கோட்டை சாலையில் உள்ள ஒரு வீட்டின் முன்பு சந்தேகத்திற்குரிய வகையில் மூடி வைக்கப்பட்டிருந்த சொகுசு காரையும் போலீஸார் சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் மூட்டை மூட்டையாக கஞ்சா இருப்பது தெரியவந்தது.
கஞ்சா மூடைகள் மற்றும் காரைப் பறிமுதல் செய்த போலீஸார், கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த அதேபகுதியைச் சேர்ந்த சக்திவேல் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சக்சேனா ஆகிய இருவரையும் பிடித்தனர். மேலும் கஞ்சா காரில் பதுக்கியதில் தொடர்புடைய மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி, ராஜாத்தி, நாக பாண்டி ஆகிய மூன்று பெண்களையும் போலீஸார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸார் விசாரணையில், 3 பெண்கள் உள்பட 5 பேரும் காரில் கஞ்சாவை கடத்தி வந்து அதனை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட முயன்றுள்ளனர். மேலும் போலீஸாரிடம் சிக்காமல் இருக்க சொகுசு காரை பல இடங்களுக்கு மாற்றியுள்ளனர் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 5 பேரும் மீதும் வழக்குப்பதிவு செய்த பட்டிவீரன்பட்டி போலீஸார், 60 கிலோ கஞ்சா மற்றும் சொகுசு கார், டூவிலரை பறிமுதல் செய்தனர்.