நேற்று சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் தமிழக பா.ஜ.க. கட்சியின் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தமிழக தலித் கட்சி தலைவர் தலித் குடிமகன் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்.
அங்கு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட வேண்டும் என்பது கட்சி தலைவராக என்னுடைய விருப்பம். ஆனால் அதற்கான முடிவை கட்சி மேலிடம்தான் எடுக்கும்.
அதேபோன்று எங்கள் கட்சியிலும் சரி, கூட்டணி காட்சியிலும் சரி எந்த விதமானக் குழப்பமும் இல்லை. தமிழகத்தின் கடன் வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டே உள்ளது. தமிழகத்தில் ஒவ்வொருவருடைய குடும்பத்துதிற்கும் தலா ரூ.2.63 லட்சம் கடன் உள்ளது.
இந்த நிலையில் மக்கள் ஐ.டி. என்ற திட்டம் எதற்கு? ஆதார் செய்யாத வேலையை மக்கள் ஐ.டி. செய்ய போகிறதா? ஆர்.கே.நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மாநகராட்சி அதிகாரி ஒருவரை அந்த தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ. எபினேசர் கட்டாயப்படுத்தி சாக்கடையை சுத்தம் செய்ய வைத்திருக்கிறார். பாதிக்கப்பட்ட அந்த நபர் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்.
இது போன்ற செயலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்து, அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்த சம்பவத்தின் மூலம் தி.மு.க., சாதி ஆதிக்கம் மிகுந்த கட்சி என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
கோவை ஈஷா யோகா மையத்தில் பயிற்சிக்கு சென்ற பெண் சடலமாக மீட்கப்பட்டது குறித்து பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஆகவே, இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை நேர்மையான விசாரணையை நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும்” என்றுத் தெரிவித்தார்.