சேலம் மாவட்டத்தில் குடிபோதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட கணவர் தீக்குளித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சேலம் மாவட்டம் அம்மாபேட்டை காமராஜர் காலனி பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வரன்(42). இவரது மனைவி ரஞ்சிதம் (38). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நாகேஸ்வரனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதையடுத்து புத்தாண்டு அன்றும் மது அருந்திவிட்டு வந்த நாகேஸ்வரன் மீண்டும் மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளார். பின்பு குடிபோதையில் இருந்த நாகேஸ்வரன் மனவேதனையடைந்து பெயிண்ட் அடிக்க பயன்படுத்தும் தின்னரை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்.
இதில் உடல் முழுவதும் தீ பரவியதால் வலியால் துடித்த நாகேஸ்வரனை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நாகேஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.