சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை இலக்கிய தின விழா 2023 இன்று நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த இலக்கிய படைப்புகளையும் அவர் பார்வையிட்டார். இதில் இரு நூற்றாண்டு காலமாக பயன்படுத்தப்பட்ட தமிழர் பண்பாட்டு நாணயங்கள், அச்சு பயன்பாடு எந்த அளவில் இருந்தது என்பதை விளக்கும் வகையிலான படைப்புகள் ஏராளமாக காட்சிபடுத்தப்பட்டிருந்தது. இவை அனைத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டபோது அதிகாரிகள் முழுமையாக விளக்கி கூறினார்கள்.
அதன் பிறகு விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “திமுகவின் ஆட்சிக் காலம் என்பது எப்போதும் தமிழாட்சி காலம்தான். தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தின் ஆட்சி என்பது தமிழ் இலக்கிய இயக்கத்தின் ஆட்சியாக நடந்துவருகிறது. திமுக ஆட்சியை தமிழாட்சி என்று நாமெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அந்த வரிசையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு முன்னெடுப்புகளை முத்தமிழ் வளர்ச்சிக்காகச் நம்முடைய ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. ஏராளமான தமிழ்க் காப்புத் திட்டங்களை இன்றைய திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்படுத்தி வருகிறது. இவை அனைத்திற்கும் மகுடம் வைத்தாற்போல இலக்கியத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்தகைய விழாவில் 100 நூல்களை நான் உங்களின் அன்போடு, ஆதரவோடு இங்கே வெளியிட்டு இருக்கிறேன்.
ஒரு புத்தகத்தை வெளியிடுவதற்காக ஒரு விழா என்று இல்லாமல்-100 புத்தகங்களை வெளியிடும் ஒரு விழாவாக இந்த விழா மிகமிக பிரமாண்டமான வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அனைத்துமே மிகப் பெரிய பதிப்பகங்களுடன் போட்டி போடக் கூடிய வகையில் அறிவுக் கருவூலங்களை வெளியிட்டு இருக்கின்றன. அதிலும் கடந்த ஓராண்டு காலத்தில் ஏராளமான புதிய புதிய புத்தகங்களை நான் பார்க்கிறேன். இவை அனைத்தும் தமிழின் பெருமையை, தமிழின் செழுமையை, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை, சமூக வரலாற்றை, தமிழ்ப் பண்பாட்டை, தமிழ்நாட்டை இன்றைய தலைமுறைக்கு கற்பிக்கும் புத்தகங்களாக அமைந்துள்ளன. மொழியைக் காப்பாற்றுவதற்காக உயிரைக் கொடுத்த இனம்தான் நம்முடைய தமிழ் இனம். திராவிட இயக்கம் அரசியல் இயக்கமாக இருந்தாலும் மொழி காப்பு இயக்கமாகவே தொடக்கம் முதல் இயங்கி வருகிறது. இந்தியாவின் எந்த மாநிலத்திலும், எந்த அரசியல் கட்சியும், இலக்கிய இயக்கமாக இருந்ததில்லை. திமுகதான் அப்படி வளர்ந்தது.
#LIVE: சென்னை இலக்கியத் திருவிழாவைத் தொடங்கி வைத்து விழாப் பேருரை https://t.co/im74HrvLcY
— M.K.Stalin (@mkstalin) January 6, 2023
தன்னை வார்ப்பித்துக் கொண்டது. மொழியைப் பற்றால் மட்டும் வளர்த்துவிட முடியாது. அறிவால், உணர்வால் வளர்த்தாக வேண்டும். அதற்காகத்தான் இத்தகைய இலக்கிய விழாக்களை நாம் நடத்துகிறோம். இன்றைய இளைய தலைமுறைக்கு தமிழ் உணர்வை ஊட்டியாக வேண்டும். தமிழ் இலக்கிய உணர்வை ஊட்டியாக வேண்டும். இலக்கியம் தான் ஒரு மனிதனை பண்படுத்தும். * மதவாதத்தாலும், சாதியவாதத்தாலும், மனிதர்களுக்குள் பிளவு ஏற்படும்போது-‘பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும்’ என்ற திருவள்ளுவரின் ஒரு வரி மனிதனை ஒன்றாக்கும்” என்றார்.