உணவு அரசியல் | கேரள கலைத் திருவிழாவில் அடுத்த ஆண்டு முதல் அசைவம் – அமைச்சர் உறுதி

கோழிக்கோடு: கேரளாவில் 61-வது கலை பண்பாட்டுத் திருவிழா நடைபெறுகிறது. கரோனா தொற்றால் இரண்டாண்டுகளாக தடை பட்டிருந்த இந்த திருவிழா இந்த ஆண்டு வெகு விமரிசையாக நடந்து வருகிறது. இதில் 10,000 பேர் கலந்து கொண்டுள்ளனர். 239 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில், இந்தத் திருவிழாவை ஒட்டி வழங்கப்படும் சைவ உணவால் சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கான உணவை மோகனன் நம்பூதிரி கேட்டரர்ஸ் தயாரிக்கின்றது. இந்த கேட்டரிங் சர்வீஸை நடத்தும் நபர் சாதிய ரீதியாக உணவில் சைவத்தை மட்டுமே தீவிரமாகக் கடைபிடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 16 ஆண்டுகளாக இதே கேட்டரிங் சர்வீஸ தான் இந்த நிகழ்ச்சிக்கு உணவு சமைத்து வழங்குகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு உணவு தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.

காரணம், இந்த ஆண்டு திருவிழா நடைபெறும் கோழிக்கோடு மாவட்டம் அதன் அசைவ உணவுகள், குறிப்பாக பிரியாணிக்கு பெயர் போனது. ஆனால், அரங்கில் சைவம் மட்டுமே என்று கெடுபிடி காட்டப்படுவது அதிருப்தியை கிளப்பியுள்ளது. விழாவில் பங்கேற்ற மாநில கல்வித் துறை அமைச்சர் சிவன் குட்டி கூட குழந்தைகளுக்கு கோழிக்கோடு பிரியாணி வழங்க வேண்டும் என்பதே தனது யோசனையாக இருந்தது என்று கூறியிருந்தார். இந்நிலையில்தான் இந்தத் திருவிழாவில் வழங்கப்படும் உணவு குறித்து தொடர்ச்சியாக சர்ச்சைகள் எழுந்தன.

இதனையடுத்து அமைச்சர் சிவன் குட்டி செய்தியாளர்கள் சந்திப்பில், “இந்தத் திருவிழா பன்முகத்தன்மை கொண்டது. கல்வி அமைச்சகம் அந்த பன்முகத்தன்மையை போற்றி வளர்க்கவே இதனை ஏற்பாடு செய்துள்ளது. பல ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியில் சைவ உணவு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அடுத்த ஆண்டு முதல் அசைவ உணவும் வழங்கப்படும். அரசாங்கம் எப்போதும் ஆரோக்கியமான விவாதங்களை வளர்த்து ஊக்குவிக்கிறது. ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் முன்னெடுக்கப்படும் விவாதங்களை ஊக்குவிப்பதில்லை” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், மோகனன் நம்பூதிரி கேட்டரிங் சர்வீஸ் உரிமையாளர் அளித்த பேட்டியில், அடுத்த ஆண்டு முதல் கேரள கலைத் திருவிழாவில் அசைவ உணவு என்று கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளதால் தனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்று கூறியுள்ளார். “அரசாங்கத்திற்கு அசைவ உணவு தான் வேண்டுமென்றால் நான் அதையும் சமைக்க ஏற்பாடு செய்வேன். என் குழுவில் அசைவம் சமைக்க தனியாட்கள் உள்ளனர். அதற்காக நான் தனியாக பாத்திரங்களும் வைத்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.