சித்தூர் மாநகராட்சியில் 17,384 பேருக்கு ₹4.88 கோடி முதியோர் உதவித்தொகை-எம்எல்ஏ தகவல்

சித்தூர் : சித்தூர் மாநகராட்சியில் 17,384 பேருக்கு ₹4.88 கோடியில் முதியோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது என்று எம்எல்ஏ ஜங்காளப்பள்ளி சீனிவாசலு தெரிவித்துள்ளார்.
சித்தூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. எம்எல்ஏ ஜங்காளப்பள்ளி சீனிவாசலு தலைமை தாங்கி பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கி பேசியதாவது: முதல்வர் ஜெகன்மோகன் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதியோர் உதவித்தொகை உயர்த்தி வழங்கி வருகிறார். கடந்தாண்டு முதியோர் உதவித்தொகை ₹2,500 வழங்கப்பட்டது.

இந்தாண்டு ₹250 உயர்த்தி ₹2,750 வழங்கப்படுகிறது. முதல்வர் ஜெகன்மோகன் 95 சதவீத வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். முதல்வர் சாதி, மதம், கட்சி என்று பாகுபாடின்றி அனைவருக்கும் நலத்திட்ட உதவிகளை  வழங்கி வருகிறார்.சித்தூர்   மாநகராட்சியில் 17,384 பேருக்கு ₹4.88 கோடியில் முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. புதிதாக 506 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

தகுதியுடையவர்கள் உரிய ஆவணங்களுடன் எப்போது வேண்டுமானாலும், முதியோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, அவர் பேசினார். இதில் மாநகராட்சி மேயர் அமுதா, ஆணையர் அருணா, உதவி ஆணையர் கோவர்தன், மாநகராட்சி அலுவலர் கோபி, நகராட்சி அலுவலர்கள், வார்டு செயலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.