பஞ்சாயத்து தேர்தலில் TMC வியூகம்… இதற்காக தான் அந்த சிக்கன் ஸ்பெஷல் திட்டமா?

மேற்குவங்க மாநிலத்தில் வரும் மார்ச் மாதம் பஞ்சாயத்து தேர்தல் நடைபெறவுள்ளது. கடைசியாக 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்தது. அதேசமயம் பாஜக 77 இடங்களில் வென்று பெரும் எழுச்சி பெற்றது. இதன்மூலம் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. படிப்படியாக தனது செல்வாக்கை உயர்த்தி ஆட்சியை பிடிக்க வேண்டும் என பாஜக மும்முரம் காட்டி வருகிறது.

மம்தா பானர்ஜி திட்டம்

ஆனால் பாஜகவை ஒருபோதும் வெற்றி பெற விட மாட்டோம் என்று மம்தா பானர்ஜி தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் தான் அடுத்த அக்னி பரீட்சைக்கு தயாராகி வருகிறது மேற்குவங்க மாநிலம். வரும் பஞ்சாயத்து தேர்தலில் தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க இருகட்சிகளும் மும்முரமாக வேலை செய்து வருகின்றன. ஆளுங்கட்சியாக இருப்பதால் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிமுகம் செய்து வீடு, வீடாக சென்று மக்களை கவரும் முயற்சியில் திரிணாமூல் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.

அமித் ஷா ஸ்கெட்ச்

மறுபுறம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவ்வப்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு மேற்குவங்க மக்களின் பல்ஸ் பார்த்து வருகிறார். இத்தகைய சூழலில் தான் மாநில அரசு மதிய உணவு திட்டத்தில் சிக்கன், சீசன் பழங்களும் அறிமுகம் செய்து சலசலப்பை ஏற்படுத்தி விட்டது. இது 4 மாதங்களுக்கு மட்டும் தான் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பஞ்சாயத்து தேர்தலை ஒட்டி வகுக்கப்பட்ட வியூகமோ என பாஜக சந்தேகிக்கிறது.

பாஜக குற்றச்சாட்டு

இதுதொடர்பாக பாஜக தலைவர் ராகுல் சின்ஹா கூறுகையில், தேர்தல் வரும் சமயத்தில் திரிணாமூல் காங்கிரஸ் அரசு இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது எங்கேயோ இடிக்கிறது. இத்தனை நாட்கள் அரிசியும், காய்கறிகளையும் கொடுத்துவிட்டு திடீரென முடிவை மாற்றி இருப்பதற்கு என்ன காரணம்? எதற்காக இப்படி ஒரு நடவடிக்கை? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் ஆளுங்கட்சி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நலன் சார்ந்த அரசு

சாமானியர்களுக்கு எப்போதும் உறுதுணையாக நிற்கும் கட்சி எங்களுடையது. அந்த வகையில் தான் மதிய உணவில் சிக்கன் திட்டமும். இதில் அரசியலை பார்க்க கூடாது எனத் தெரிவித்துள்ளார். இம்மாநிலத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 1.16 கோடி மாணவர்கள் மதிய உணவு திட்டத்தின் மூலம் பலன் பெற்று வருகின்றனர்.

தற்போது மதிய உணவில் அரிசி சாதம், உருளைக்கிழங்கு, காய்கறிகள், தானியங்கள், சோயாபீன்ஸ், முட்டை ஆகியவை பரிமாறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தான் PM POSHAN திட்டத்தின் கீழ் வாரத்தில் ஒருமுறை மட்டும் சிக்கன், சீசன் பழங்கள் வழங்கும் திட்டத்தை 371 கோடி ரூபாய் செலவில் அமல்படுத்த மேற்குவங்க அரசு முன்வந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.