ரெய்டு விட்ட சென்னை மாநகராட்சி மேயர் பிரியா… திரு.வி.க நகரில் நடந்தது என்ன?

சென்னை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேற லெவலுக்கு அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. இது மத்திய அரசின் நேரடி திட்டம் என்றாலும் மாநில அரசும் பல்வேறு வகைகளில் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி கொண்டிருக்கிறது. அந்த வகையில் சென்னை மேயர் பிரியா ராஜனின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மிகவும் இளம் பெண் மேயர் என்ற பெருமைக்குரியவர்.

அடுத்தடுத்த சர்ச்சைகள்

அதேசமயம் ஊடகங்களை சரியாக கையாளத் தெரியவில்லை, மாநகராட்சி பணிகளில் போதிய முதிர்ச்சியின்மை, அமைச்சர்கள் சிறுபிள்ளை போல நடத்துவது என அவ்வப்போது சர்ச்சைகளும் எழாமல் இல்லை. ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் தனது நிலையை மேம்படுத்தி காட்டியிருக்கிறார். சமீபத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளின் போது சென்னை மக்களை சந்தித்து புள்ளி விவரங்களுடன் அரசின் செயல்பாடுகளை விரிவாக எடுத்துரைத்து கவனம் ஈர்த்தார்.

முதல்வரின் கான்வாய் வாகனம்

ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கான்வாய் வாகனத்தில் தொங்கிக் கொண்டு சென்று புதிய சர்ச்சையில் சிக்கினார். இவை எல்லாவற்றையும் ஓரங்கட்டும் வகையில் தனது களப்பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கான காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படும் சமையல் கூடங்களில் திடீர் ஆய்வு செய்து அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

திரு.வி.நகர் விசிட்

இந்நிலையில் நேற்றைய தினம் மாநகராட்சி பள்ளிகளில் கல்வி சார்ந்த செயல்பாடுகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார். திரு.வி.நகரில் உள்ள அரசு பள்ளிக்கு சென்று சில வகுப்பறைகளில் மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து கொண்டார். அப்போது ஆசிரியர்களின் நடத்தும் பாடத்தை கவனித்தார். சிறந்த முறையில் அனைத்து பாடங்களும் நடத்தப்படுகிறதா? என்று மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

கற்றல் திறன்கள் குறித்து ஆய்வு

மேலும் தினசரி என்னென்ன வீட்டு பாடங்கள் அளிக்கப்படுகின்றன? அவற்றை மாணவர்கள் எந்த அளவிற்கு செய்து முடிக்கின்றனர்? மறுநாள் வீட்டு பாடங்கள் முறையாக சரிபார்க்கப்படுகிறதா? என்றெல்லாம் கேட்டார். இதையடுத்து மாணவர்களின் கையெழுத்து விஷயத்தில் சிறப்பு கவனம் அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

நலத்திட்ட பணிகள்

அப்போது சென்னை மேயர் பிரியா ராஜன் உடன் திரு.வி.க நகர் எம்.எல்.ஏ தாயகம் ரவி, மண்டல அதிகாரி முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக திரு.வி.நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து மேயர் பிரியா ஆய்வு செய்தார். இங்கு 16.61 லட்ச ரூபாய் மதிப்பில் புதிதாக பேருந்து நிழற்கூடம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் 74வது வார்டில் 80 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் வாலி பால் மைதானம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.

அடுத்தகட்ட ஏற்பாடு

கிருஷ்ண தாஸ் சாலையில் உள்ள தொடக்கப் பள்ளியில் 35 லட்ச ரூபாய் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு வருகிறது. கூக்ஸ் சாலையில் 5.50 கோடி ரூபாய் மதிப்பில் உயர் நிலைப் பள்ளி கட்டப்பட்டு வருகிறது. பெரம்பூர் மேம்பாலத்தை அழகுபடுத்தும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இவை அனைத்தையும் மேயர் பிரியா நேரில் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.