திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கரடிக்கல் ஊராட்சிக்குட்பட்டது அனுப்பபட்டி கிராமம். இந்த கிராமத்தில் காவல்தெய்வமான புகழ்பெற்ற கரும்பாறை முத்தையாசாமி கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் பவுர்ணமி தினத்திற்கு மறுநாள் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் அசைவ உணவு திருவிழா நடைபெறும். நாடு நலபெறவும், விவசாயம் செழிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழா நடைபெற்று வருகிறது. இதற்காக பக்தர்கள் கருப்பு கிடாய்களை காணிக்கையாக கோயிலில் விட்டு செல்வர். அந்த கிடாய்கள் ஓராண்டு அனுப்பப்பட்டி, கரடிக்கல், உரப்பனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமபகுதிகளில் உள்ள வயல்வெளிகளில் மேய்ந்து திரியும். கருப்பாறை முத்தையா கோயிலுக்கு நேர்த்திக்கடனாக விடப்பட்ட கிடாய்கள் என்பதால் முத்தையா சுவாமியே தங்களது விளைநிலங்களில் அருள்பாலிப்பதாக கருதி பொதுமக்கள் யாரும் இவற்றை தொந்தரவு செய்யமாட்டார்கள்.
விழாவிற்கு முன்தினம் அனைத்து கிடாய்களும் கோயில் வளாகத்திற்கு வந்துவிடும். பின்னர் திருவிழா நாளில் இந்த கிடாய்கள் பலியிட்டு அசைவ அன்னதானம் நடைபெறும். இந்தாண்டு இந்த திருவிழா இன்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று நள்ளிரவு முதலில் சக்திகிடாய் வெட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 60க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டு 50 மூட்டைகள் அரிசியில் அசைவ உணவு தயாரிக்கப்பட்டது. காலை 8 மணிக்கு முத்தையா சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. முதலில் சர்க்கரை பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்ற பின்பு அசைவ உணவு வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து கோயில் திறந்தவெளி வளாகத்தில் அசைவ அன்னதானத்திற்கு வந்த அனைத்து பக்தர்களும் வரிசையாக அமரவைக்கப்பட்டு இலையில் சாதம் பரிமாறப்பட்டது. அனைத்து இலைகளிலும் சாதம் பரிமாறப்பட்ட பின்பு ஆட்டுக்கறி குழம்பு ஊற்றப்பட்டது. இதுவும் அனைத்து இலைகளுக்கும் பரிமாறப்பட்ட பின்பு அசைவ உணவை ருசித்தனர். இந்த திருவிழாவில் திருமங்கலம், செக்கானூரணி, செல்லம்பட்டி, கருமாத்தூர், உரப்பனூர், கரடிக்கல் மாவிலிபட்டி, உசிலம்பட்டி, தேன்கல்பட்டி, சோழவந்தான், வாலாந்தூர், ஆண்டிப்பட்டி, தேனி, கம்பம், விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். காலை 8 மணிக்கு துவங்கிய அசைவ அன்னதானம் மதியம் 1 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது.
இதில் 4 வயது ஆண் குழந்தை முதல் 80 வயது வரையிலான முதியோர் வரையில் ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர். திருவிழா நடைபெறும் பகுதியில் பெண்கள் யாரும் வரவில்லை. பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலையை யாரும் எடுக்காமல் விட்டு செல்வர். இந்த இலைகள் அனைத்தும் காய்ந்து காற்றில் பறக்க துவங்கிய பின்புதான் பெண்கள் தரிசனத்திற்கு வருவார்கள். அசைவ அன்னதான திருவிழாவையொட்டி ஆஸ்டின்பட்டி, திருமங்கலம் நகர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அடுத்தாண்டு நடைபெறும் கரும்பாறை முத்தையா சாமி கோயில் அசைவ அன்னதான விழாவிற்கு நேர்த்திகடனாக இன்று ஏராளமான பக்தர்கள் கருப்புநிற கிடாய்களை கோயிலில் காணிக்கையாக கொடுத்தனர்.