சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள 45,000 பேருக்கு பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் புத்தாடைகளை வழங்கும் நிகழ்ச்சியை விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் நேற்று (06.01.2023) தொடங்கி வைத்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதற்கட்டமாக சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 4,000க்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து பொங்கல் பரிசுப் பொருட்கள் மற்றும் புத்தாடைகளை வழங்கினார்.
மேலும் தனது சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுப் பொருள்கள் மற்றும் புத்தாடைகள் வழங்க உள்ளார். நேற்று (06.01.2023) நடைபெற்ற நிகழ்ச்சியில் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளுக்குப்பட்ட புதுப்பேட்டை நாராயண நாயக்கர் தெரு, ராயப்பேட்டை நைனியப்பன் தெரு, சுப்பராயன் தெரு சந்திப்பு, ராயப்பேட்டை பூரம் பிரகாசம் தெரு, மயிலாப்பூர் சிஐடி காலனி காட்டு கோயில் தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் 4000 பொது மக்களுக்கு பொங்கல் பரிசுப் பொருட்கள் மற்றும் புத்தாடைகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கட்சி தொண்டர்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.