தனது மரணத்தை பெற்றோரிடம் மறைக்க சொன்ன 6 வயது சிறுவன்.. உருக்கமாக பகிர்ந்த மருத்துவர்…

ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம் தம்பதியின் 6 வயது மகனான ராமுவுக்கு சில மாதங்களுக்கு முன்பு வலது கை மற்றும் கால் செயலிழந்துள்ளது. பதறிப்போன பெற்றோர் மருத்துவமனைக்கு சென்று பல்வேறு ஸ்கேன்களை எடுத்து பார்த்தனர். தலையில் எடுக்கப்பட்ட ஸ்கேனில் ராமுவின் இடது பக்க மூளையில் க்ளியோபிளாஸ்டோமா மல்டிஃபார்ம் கிரேடு 4 என்ற கேன்சர் நோய் இருப்பது தெரியவந்துள்ளது. இது மூளை அல்லது முதுகுத் தண்டுவடத்தில் ஏற்படக்கூடிய அதி தீவிரமான புற்றுநோயாகும். சிகிச்சையில் அதிசயம் நடக்கவில்லை என்றால் மரணம் நிச்சயம்.

மருத்துவர்கள் ராமுவுக்கு 6 மாதம் கெடு வைத்துள்ளனர். அதுவும் அதிகபட்சம்தான் என்ற கணக்கில் பெற்றோரிடம் அவ்வாறு தெரிவித்துள்ளனர் மருத்துவர்கள். இந்நிலையில், ராமுவின் பெற்றோர் ஹைதராபாத் அப்போல்லோவில் உள்ள நரம்பியல் நிபுணர் சுதிர் குமாரிடம் அவ்வப்போது ராமுவை அழைத்து சென்று ஆலோசனை பெறுவது வழக்கம். அவ்வாறு ஒருநாள் ராமுவை மருத்துவர் அறைக்கு வெளியே அமர வைத்துவிட்டு மகனின் ரிப்போர்டுகளுடன் சுதிர் குமாரை சந்திக்க உள்ளே சென்றுள்ளனர்.

ரிப்போர்டுகளை சரிபார்த்துக்கொண்டிருந்த மருத்துவரிடம் ராமுவின் பெற்றோர் கேட்க நினைத்த கேள்விகளை கேட்டு சந்தேகங்களை தீர்த்துக்கொண்டனர். மேலும், ராமுவுக்கு இப்படியான நோய் இருப்பதை அவரிடம் தெரிவிக்கவேண்டாம் என்று கனத்த இதயத்துடன் கேட்டுக்கொண்டனர். சில நொடிகள் மவுனமாக இருந்து சரி என்றார் டாக்டர். ராமுவின் பெற்றோர் எழுந்து புறப்பட்டு வெளியே சென்றனர்.

அப்போது, ராமு பெற்றோரை பார்த்து, நான் ஒரு தடவை டாக்டரை தனியாக பார்க்க ஆசைப்படுகிறேன் என்று கேட்க, பெற்றோரும் அவனை வீல் சேரில் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றனர். ராமுவின் பெற்றோர் வெளியே செல்ல டாக்டரின் கதவு சாத்தப்பட்டது. டாக்டரின் முகத்தை பார்த்ததும் மெல்ல சிரித்த ராமு, டாக்டர் எனக்கு ஒரு உதவி செய்வீர்களா என்று கேட்டு கோரிக்கையை சொல்ல தொடங்கினான்.. டாக்டர் என்னுடைய வியாதியை பற்றி கூகுளில் தேடி பார்த்தேன். அதில், நான் இன்னும் 6 மாதம்தான் உயிரோடு இருப்பேன் என்பதை அறிந்துகொண்டேன். எனது பெற்றோர் மிகவும் பாவம். அவர்கள் என்னை மிகவும் நேசிக்கிறார்கள். அவர்களிடம் எனக்கு புற்றுநோய் இருப்பதையும், நான் சீக்கிரம் இறந்துவிடும் தகவலையும் கூற வேண்டாம் என தெரிவித்தான். அதை கேட்டு ஷாக்கான டாக்டர், ராமுவின் கோரிக்கையை ஏற்று அவனுக்கு உறுதி அளித்தார்.

அதன் பிறகு நடந்தவற்றை டாக்டர் சுதிர் தனது டிவிட்டர் பதில் உருக்கமாக பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், ராமுவுக்கு கொடுத்த வாக்கை என்னால் காப்பாற்ற முடியவில்லை. பெற்றோரிடம் இதை எப்படி ஒரு மருத்துவரால் மறைக்க இயலும்.. ராமு என்னிடம் சொன்னதை அவனது பெற்றோரிடம் பகிர்ந்தேன். அவர்கள் கண்ணீர் குளமாகின. தனது மகன் இன்னும் 6 மாதம் உயிர் வாழ்வான் என்ற தகவல் மட்டும் அவர்களுக்கு ஆறுதல் அளித்தது. அவனுடன் ஒவ்வொரு நொடியும் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டு சென்றனர். அன்றில் இருந்து சுமார் 9 மாதங்கள் ஓடின. நானே அந்த நிகழ்வினை மறந்துவிட்டேன்.

ஒருநாள் ராமுவின் பெற்றோர் என்னை வந்து சந்தித்தனர். அவர்களை பார்த்ததும் நான் தெரிந்துகொண்டேன். ராமுவை பற்றி விசாரித்தேன், அதற்கு அவர்கள், ராமு 8 மாதம் எங்களுடன் இருந்தான், 2022 டிசம்பரில் எங்களைவிட்டு சென்றுவிட்டான். அந்த 8 மாதங்கள் அவன் விரும்பிய இடங்களுக்கெல்லாம் அழைத்து சென்று சந்தோசமாக இருந்தோம். 6 மாதங்களாக நாங்கள் இருவரும் வேலைக்கு செல்லவில்லை. உங்களை நேரில் பார்த்து நன்றி கூறவே வந்தோம் டாக்டர் என்று ராமுவின் பெற்றோர் கூறியதாக டாக்டர் சுதிர் உருக்கமாக ட்வீட் செய்துள்ளார். இன்று இந்த செய்திதான் இணையமெங்கும் பரவி அனைவரின் நெஞ்சங்களை உலுக்கி வருகிறது.

குறிப்பு: ராமு என்பது சிறுவனின் உண்மையான பெயர் அல்ல.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.