`பெற்றோரிடம் என் கேன்சர் பாதிப்பு பற்றி சொல்லாதீர்கள்’ – மருத்துவரை கலங்க வைத்த 6 வயது சிறுவன்

தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகளைப் பார்க்கும் மருத்துவர்கள், ஒவ்வொருவரிடம் இருந்தும் பல அனுபவங்களைப் பெறுகிறார்கள். அந்த வகையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த மருத்துவர் சுதிர் குமார் பகிர்ந்து கொண்ட நிகழ்வு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேன்சர்

அந்தப் பதிவில், “புற நோயாளிகள் பிரிவில் பிசியாக இருந்த நேரம். ஒரு இளம் ஜோடி உள்ளே நுழைந்தனர். `எங்கள் மகன் மனு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வெளியே காத்திருக்கிறான். அவனுக்கு, தான் கேன்சரால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியாது. நாங்களும் கூறவில்லை. அவனை சிகிச்சையை எடுத்துக் கொள்ள ஆலோசனை கூறுங்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்பதை அவனிடம் தெரிவிக்காதீர்கள்’ என்றனர்.

நான் தலையசைத்து அவர்களின் கோரிக்கையை ஆமோதித்தேன். 6 வயதுச் சிறுவன் மனு சக்கர நாற்காலியில் உள்ளே அழைத்து வரப்பட்டான். சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கும் புற்றுநோய் மருத்துவர், அவனுக்கு ஏற்படும் வலிப்புகளைக் கட்டுப்படுத்துவதற்காக என்னிடம் மருத்துவ ஆலோசனை பெறும்படி அனுப்பி இருக்கிறார். 

முகத்தில் புன்னகையோடு, தைரியமானவாகத் தென்பட்டான் மனு. கேன்சர் பாதிப்பின் 4-ம் நிலையில் இருந்த சிறுவனுக்கு, இடது மூளையில் ஏற்பட்ட பாதிப்பால் வலது கால் மற்றும் கை செயலிழந்திருந்தது. அறுவை சிகிச்சைக்குப் பின் சிறுவனுக்கு கீமோதெரபி கொடுக்கப்பட்டு வருகிறது என அவனுடைய நோயறிக்கையைப் பார்த்ததில் தெரிந்து கொண்டேன்.

பெற்றோர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்துக் கொண்டிருக்கையில், சிறுவன் மனு என்னிடம் தனியாகப் பேச வேண்டும் என்றான். பெற்றோர்கள் ஒப்புக் கொண்டு வெளியில் சென்றனர். 

“டாக்டர்! எனக்கு என்ன நோய் என்பதை ஐபேடில் பார்த்து அறிந்து கொண்டேன். நான் இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உயிரோடு இருப்பேன். நான் இதை என் பெற்றோரிடம் கூறவில்லை. தெரிந்தால் மிகவும் வருத்தப்படுவார்கள். நீங்களும் சொல்லாதீர்கள்…’’

– இதைக் கேட்ட மாத்திரத்தில் நிலைகுலைந்து போனேன். சில நிமிடங்களுக்குப் பேச்சற்று கிடந்தேன். அதன்பின், “கண்டிப்பாக நீ சொன்னதைச் செய்கிறேன்’’ என உறுதியளித்துப் பெற்றோரை அழைத்தேன். மனு சென்ற பின் நடந்தவற்றை அவர்களிடம் பகிர்ந்தேன். “மனுவுக்குத் தன்னைப் பற்றித் தெரிந்திருக்கிறது. நோயைத் தாண்டி, நீங்கள் மூவரும் ஒன்றாக நாள்களைச் செலவிடுவது முக்கியம்’’ எனக் கூறினேன். கனத்த இதயத்தோடும் கண்ணீரோடும் அவர்கள் விடைபெற்றனர்.

இந்த நிகழ்வை முழுதாக மறந்துவிட்டேன். 9 மாதங்களுக்குப் பிறகு மனுவின் பெற்றோர் வந்தனர். “நாங்கள் மனுவோடு சிறந்த நாள்களைச் செலவிட்டோம். டிஸ்னிலாண்டிற்கு சென்றோம். கடந்த மாதம் மனு எங்களை விட்டுப் பிரிந்தான். கடந்த 8 மாதங்கள் மனுவோடு கிடைத்த நல்ல நினைவுகளுக்காக நன்றி கூற வந்தோம்’’ என்றனர்’’ என்று பதிவிட்டுள்ளார். மனதை கலங்க வைக்கும் இந்தப் பதிவு தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது.

6 வயது சிறுவனின் தைரியம் அசாத்தியமானது!



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.