கோவை: தாய்மொழியில் கற்பது முக்கியத்துவம் வாய்ந்தது என கோவையில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசு துணைத்தலைவர் வெங்கைய நாயுடு பேசினார்.
ரோட்டரி அமைப்பு சார்பில் மாவட்ட அளவிலான கருத்தரங்கு கோவை நீலம்பூரிலுள்ள தனியார் கல்வி நிறுவன வளாகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் தலைமை வகித்து அவர் பேசியதாவது:
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அனைவரின் பங்களிப்பு அவசியம். குறிப்பாக குறைந்த நிலப்பரப்பில் அடர்ந்த மரங்களை வளர்க்க உதவும் ‘மியாவாக்கி’ மரம் வளர்ப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும்.
இளைஞர்களை மேம்படுத்த சிவில் சர்வீஸ் கல்வி மையங்களை அதிகளவு திறக்க வேண்டும். தாய்நாடு, தாய்மொழி, குரு மீது அதிக அன்பு கொண்டிருத்தல் அவசியம். பராமரிப்பு மற்றும் பகிர்தல் வாழ்க்கையின் அடிப்படை. இயற்கை மற்றும் கலாச்சாரம் வளமான எதிர்காலத்தை தரும்.
தாய்மொழியில் கற்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கலாச்சாரம் மற்றும் நிலைத்தன்மைக்கு உதவும். கண்ணாடி எவ்வாறு சிறந்த பார்வை கிடைக்க உதவுகிறதோ அதுபோல் தாய்மொழியை கற்றுக் கொள்வதுடன் பிற மொழிகளையும் கற்க ஆர்வம் காட்ட வேண்டும். நமது நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சாரம் மூலம் வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியா என்பதை புரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.