புதுடெல்லி: மாணவர்கள் ஒரேநேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளை படிக்க அனுமதிக்கும் எளிய வழிகளை உருவாக்கும்படி பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு(யுஜிசி) அறிவுறுத்தி உள்ளது.கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை படிக்கும் மாணவர்கள் ஒரேநேரத்தில் இரண்டு பாடப்பிரிவுகளை தேர்வு செய்து படிக்கலாம், இந்த இரண்டு பாடங்களை நேரடியாக கல்லூரியிலோ, ஆன்லைன் மூலமாகவோ படிக்கலாம் என்று கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் யுஜிசி அறிவிப்பு வௌியிட்டது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அது வௌியிட்டது.
இந்நிலையில், பல்கலைக்கழகங்களும், உயர்கல்வி நிறுவனங்களும் மாற்று சான்றிதழ்களை கேட்பதால் ஒரேநேரத்தில் இரண்டு பாடங்களை படிப்பதில் சிக்கல் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இதுபற்றி கூறிய பல்கலைக்கழக மானியக்குழு செயலாளர் பி.கே.தாக்கூர், மாணவர்கள் ஒரேநேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளை தொடர அனுமதிக்க சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மூலம் எளிய நடைமுறைகளை உருவாக்கும்படி பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது” என்றார்.
