வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுச்சேரி: புதுச்சேரியில் மின் கட்டணம் யூனிட்டுக்கு 40 பைசா முதல் 45 பைசா வரை உயர்த்த மின்துறை அனுமதி கோரியுள்ளது.

புதுச்சேரி மின்துறையின் ஆண்டு வரவு செலவு கணக்குகள், இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்து ஒப்புதல் பெறப்படும். மின்துறை ஊழியர்கள் சம்பளம், பராமரிப்பு, புதிய மின்மாற்றி அமைத்தல் என அனைத்து செலவுகள் மின் கட்டண வசூல் மூலம் சரி செய்யப்படும்.
ஊழியர்கள் சம்பளம், பராமரிப்பு, வாரா மின் கட்டண பாக்கி உள்ளிட்டவையால் மின்துறை வரவு செலவு கணக்கில் ஆண்டு தோறும் பல கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதனை ஈடுகட்ட ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.
அதன்படி 2021, 2022 மற்றும் 2023ம் ஆண்டிற்கான கட்டண உயர்வு குறித்து, கடந்த 2021ம் ஆண்டு இணை மின்சார ஒழுங்குமுறை ஆணைய கூட்டம் நடந்தது. அதில், மூன்றாண்டுகளுக்கான கட்டண உயர்வுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி, 2023-24ம் ஆண்டிற்கான மின்சார கட்டணம் உயர்த்த, வரவு செலவு கணக்குகளை சுட்டிக் காட்டி இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திற்கு புதுச்சேரி மின்துறை பரிந்துரை செய்து அனுமதி கேட்டுள்ளது.

புதுச்சேரியில் வீட்டு உபயோக மின்சார கட்டணம் முதல் 100 யூனிட் வரை, ஒரு யூனிட்டிற்கு ரூ. 1.90 வசூலிக்கப்படுகிறது. இதனை ரூ. 2.30 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. 101 முதல் 200 யூனிட் வரை யூனிட்டிற்கு தற்போது ரூ. 2.90 வசூலிக்கப்படுகிறது.
இதனை ரூ.3.30 ஆக உயர்த்தவும், 201 முதல் 300 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு வசூலிக்கப்படும் ரூ. 5 கட்டணம் ரூ. 5.45 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. 300 யூனிட்டிற்கு மேல் யூனிட்டிற்கு ரூ. 6.45 வசூலிப்பதை ரூ. 6.85 ஆக அதிகரிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.
இதேபோல் வர்த்தக பயன்பாட்டிற்கு முதல் 100 யூனிட் வரை யூனிட் கட்டணம் ரூ. 5.70ல் இருந்து ரூ.6 ஆக உயர்த்தவும், 101 முதல் 250 யூனிட் வரை யூனிட்டிற்கு ரூ. 6.75 ஆக இருந்த கட்டணம் ரூ. 6.85 ஆகவும், 250 யூனிட்டிற்கு மேல் யூனிட்டிற்கு ரூ. 7.50 ஆக இருந்த கட்டணம் ரூ. 7.60 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோன்று, உயர் மின் அழுத்த தொழிற்சாலைகளுக்கான கட்டணம் யூனிட்டிற்கு ரூ. 5.30ல் இருந்து ரூ. 5.45 ஆக உயர்த்தப்பட உள்ளது. இதற்காக இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பொதுமக்களிடம் விரைவில் கருத்து கேட்பு கூட்டம் நடத்த உள்ளது. அதன்பின்பு, ஏப். 1ம் தேதி முதல் புதிய மின் கட்டண உயர்வு அறிவிப்பு வெளியாக உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement