“ஃபைனான்ஸின் அடிப்படைகூட தெரிஞ்சுக்காம `துணிவு' படத்தை எடுத்திருக்கீங்களே வினோத், இது நியாயமா..?''

‘ஒரு திரைப்படத்தால் என்ன செய்துவிட முடியும்?’ என்ற கேள்வியோடு கடந்து போய்விடக் கூடிய காலகட்டம் இதுவல்ல. ஏனெனில், திரைப்படம் என்பது நமது வாழ்வின் தவிர்க்க முடியாத ஓர் அங்கம். அப்படிப்பட்ட சினிமாவில் நல்ல விஷயங்களைச் சொன்னால் பாராட்டலாம். ஆனால், தவறான விஷயத்தைச் சொன்னால்….?

துணிவு

பொங்கலை முன்னிட்டு வெளியாகியிருக்கும் ‘துணிவு’ திரைப்படத்தின் கதை இப்போது விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. இந்தப் படத்தில், ‘மியூச்சுவல் ஃபண்ட் என்பது மோசடியான திட்டம். அதில் முதலீடு செய்து பணத்தை இழக்கிறார்கள் மக்கள்’ என்கிற கருத்து ஆணித்தரமாக எடுத்துவைக்கப்பட்டு இருக்கிறது. இந்த விஷயம்தாம் இப்போது மக்கள் மத்தியில் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

இந்த திரைப்படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியிருக்கிறார். இந்தத் திரைப்படத்துக்கு கிட்டத்தட்ட ரூ.70 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டு, கதாநாயகனாக நடித்திருக்கிறார் அஜித்குமார்.

பி.பத்மநாபன்

துணிவு திரைப்படத்தில் சொல்லியிருக்கும் விஷயம் இதுதான்…”YOUR BANK என்கிற வங்கி, தனது பணியாளர்கள் மூலமாக மக்களிடம் மியூச்சுவல் ஃபண்டுகளை விற்பனை செய்கிறது. அப்படி விற்கும்போது, அந்த ஃபண்டுகள் குறித்த உண்மையை மறைத்து, அதிக வருமானம் தருகிறோம், இரண்டே வருடத்தில் நீங்கள் முதலீடு செய்த பணம் இரட்டிப்பாகிவிடும் என்கிற இல்லாத பொல்லாததையெல்லாம் சொல்கிறது. அதன் மூலம் திரட்டப்படும் ரூ.25,000 கோடி அதே வங்கியின் தலைவருக்கு சொந்தமான நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் 10 நிறுவனங்களில் பங்குச் சந்தை மூலமாக முதலீடு செய்கிறது.

ஹெச்.வினோத்

ஒரு சில வருடங்களில் அந்த 10 நிறுவனங்களும் திவாலாக, மக்களிடம் திரட்டிய மொத்த பணமும் திவாலானதாக சொல்லி, மக்களின் கட்டிய மொத்த பணமும் சுருட்டப்படுகிறது. பணத்தை திரும்பக் கேட்டு வங்கியின்முன் மக்கள் போராட்டம் நடத்தியும் அவர்களுக்குக் பணம் கிடைத்தபாடில்லை.

ஹீரோ அஜித்குமார், மோசடி செய்தவர்களிடம் இருந்து எப்படி மொத்தப் பணத்தையும் மீட்கிறார், அதை அவர் எப்படி மக்களிடம் கொண்டு போய் சேர்க்கிறார்” என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

இதில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சார்ந்து சொல்லப்பட்டிருக்கும் அனைத்து விஷயங்களுமே உண்மைக்குப் புறம்பானவை. இதில் துளியும் உண்மை இல்லை என முதலீட்டு ஆலோசகர்கள் வட்டாரத்திலும், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன.

‘துணிவு’ படத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் குறித்து மேலும் தெரிந்துகொள்ள நிதி ஆலோசகர் பி.பத்மநாபனிடம் பேசிய போது, “மியூச்சுவல் ஃபண்ட் குறித்து அடிப்படையான விஷயங்களைக்கூட தெரிந்துகொள்ளாமல் ஹெச்.வினோத் இந்தப் படத்திற்கான கதையை எழுதியிருக்கிறார்.

அந்தக் கதை குறித்து கொஞ்சம்கூட ஆராயாமல் நடிகர் அஜித்குமாரும் நடிக்கவும் செய்திருக்கிறார். புகை பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று சொல்பவர், மியூச்சுவல் ஃபண்ட் பற்றி தவறான கருத்தை மக்களிடம் பதிவு செய்யும் படத்தில் நடித்திருப்பது மட்டும் சரியா?

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது ஆம்ஃபி என்கிற அரசு கட்டுப்பாட்டு அமைப்புக்குள் வரும் ஒரு முதலீடு. செபி என்கிற கட்டுப்பாட்டு அமைப்பு பங்குச்சந்தை முதலீட்டை கட்டுப்படுத்துவது போல, ஆம்ஃபி மியூச்சுவல் ஃப்ண்ட் நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்காணித்து மோசடிகள் எதுவும் நடக்காதபடி பார்த்துக் கொள்கிறது.

துணிவு படத்தில் சொல்லியிருப்பது போல, ‘மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்யுங்கள், இரட்டிப்பு லாபத்தை தருகிறேன்’ என்று மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமோ அல்லது மியூச்சுவல் ஃபண்டை விநியோகஸ்தரோ ஏமாற்ற முடியாது. அப்படி இருக்கும்போது இந்தப் படத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டது ஏன்,

திரைப்படம் என்பது கிரியேட்டிவிட்டிக்கு பஞ்சமில்லாத ஒரு களம். அதில் உள்ளதை உள்ளபடியோ அல்லது கொஞ்சம் மிகைப்படுத்தியோ சொல்லலாமே தவிர, இல்லாத ஒரு விஷயத்தைப் பொய்யாக, தவறாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதை அனுமதிக்க முடியாது.

‘சதுரங்க வேட்டை’ மோசடி!

பொழுதுபோக்குக்காக மட்டுமே எடுக்கப்படும் திரைப்படங்கள் பற்றி யாரும் எதுவும் பேச மாட்டார்கள். ஆனால், மக்களுக்கு பயன்படும் வகையில் எடுக்கப்படும் திரைப்படத்தில் ஒரு சின்ன தவறுகூட இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அந்த படத்தின் இயக்குநரின் பொறுப்பு.

ஆனால் ஹெச்.வினோத் ஃபைனான்ஷியல் ரீதியில் ஏற்கெனவே ‘சதுரங்க வேட்டை’ என்கிற ஒரு அழகான, கருத்துள்ள படத்தை கொடுத்துவிட்டு, ‘துணிவு’ மாதிரி தப்பும் தவறுமாக ஒரு படம் எடுக்கும்போது வருத்தமாக இருக்கிறது.

ஃபைனான்ஸியல் ரீதியான படம் என்பதால், அத்துறை சார்ந்த நிபுணர்களிடம் ஹெச்.வினோத் ஆலோசனைகளை வாங்கி இருக்கலாம். இந்தத் தவறு நடைபெறாமல் தவிர்த்திருக்கலாம்.

இன்றைய நிலையில், மோசடிகள் அதிகம் நடப்பது பொன்ஸி எனப்படும் மோசடித் திட்டங்களில்தான். அதை சொல்ல நினைத்து, மியூச்சுவல் ஃபண்ட் என்கிற தவறான வார்த்தையை ஹெச்.வினோத் தன் கதையில் பயன்படுத்தியிருப்பதாகத்தான் தெரிகிறது. இதற்கான சரியான விளக்கத்தை ஹெச்.வினோத் கொடுத்தே ஆகவேண்டும்” என்றார் காட்டமாக.

துணிவு விமர்சனம்

கடந்த டிசம்பர் 31, 2022-ம் தேதி நிலவரப்படி, இந்தியாவெங்கிலும் இருக்கும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப்படும் கணக்குகளின் எண்ணிக்கை மட்டும் சுமார் 14.11 கோடி. இந்த துறை நிர்வகித்துவரும் மொத்த சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ.40 லட்சம் கோடிக்குமேல்.

அமெரிக்காவின் மக்கள் தொகையில் 60 சதவிகிதத்துக்கு மேலானவர்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறார்கள். ஆனால், வெறும் 5%பேர்கூட இன்னும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யத் தொடங்கவில்லை. இந்த நிலையில், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றி தவறான கருத்துகளைப் பரப்புவது, மோசடித் திட்டங்களை நோக்கி மக்கள் செல்லவே வழிவகுக்கும்!

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் எப்படி செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொண்டு மக்கள் முதலீடு செய்யவேண்டும். இந்தப் படத்தில் மியூச்சுவல் ஃபண்ட் பற்றி தவறாக சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை நம்பாமல், அதை சரியாக புரிந்துகொள்வதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த இயக்குநருக்கும், அஜித்துக்கும் நன்றி சொல்லலாம்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.