புதுடெல்லி: “நமது நாட்டில் அனைத்திற்கும் மேலானது அரசியலமைப்புதானே தவிர நாடாளுமன்றம் அல்ல” என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர், நாடாளுமன்றத்தின் இறையாண்மையை நீதித் துறை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தின் இறையாண்மையை நீர்த்துப் போகச் செய்வதற்கான முயற்சியை நீதித் துறை மேற்கொள்ளக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் மீதான தீர்ப்பின்போது, அவை அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது என நீதிமன்றங்கள் கூறுவதை ஏற்க முடியாது என தெரிவித்த தன்கர், நாடாளுமன்றமே மேலானது என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில், இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ள ப. சிதம்பரம், ”அனைத்திற்கும் மேலானது நாடாளுமன்றம் என குடியரசுத் துணைத் தலைவர் கூறி இருப்பது தவறானது. அரசியல் சாசனம்தான் அனைத்திற்கும் மேலானது. அடிப்படை கட்டமைப்பு என்பது அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகள் மீது பெரும்பான்மையினரால் நடத்தப்படும் தாக்குதலை தடுப்பதற்காக உருவாக்கப்பட்டது.
தற்போது இருக்கும் நாடாளுமன்ற முறைக்கு பதிலாக குடியரசுத் தலைவர் முறைக்கு ஆதரவாகவோ, மாநிலங்களுக்கு இருக்கும் சட்டமியற்றும் தனி அதிகாரத்தை வழங்கும் சட்டம் ரத்து செய்யப்படுவதாகவோ நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் சட்டம் இயற்றப்படுமானால் அது செல்லுபடியாகுமா?
உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கான தேசிய நீதித் துறை நியமன ஆணைய சட்டத்தை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தன்கர் விமர்சித்திருக்கிறார். அந்த மசோதா தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு வேறொரு புதிய மசோதாவைக் கொண்டு வரும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உள்ளதே? அதை யார் தடுத்தார்கள்?
நாடாளுமன்றம் இயற்றும் ஒரு சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்கிறது என்றால் அதற்கு அடிப்படை கட்டமைப்பு கோட்பாடு தவறு என்று அர்த்தமல்ல. ஏதோ ஆபத்து வர இருப்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதையே குடியரசுத் துணைத் தலைவரின் கருத்து உணர்த்துகிறது” என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.