சென்னை, பல்லாவரத்தை அடுத்த பம்மல் நாகல்கேணி ஆதம் நகர், முதல் தெருவில் வசித்து வருபவர் சின்ன பொண்ணன் (80). இவர் இருபது ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, இவரின் ஆடுகள் திருட்டுப்போனது. இதுகுறித்து அவர், சங்கர்நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது காரில் வந்தவர்கள் ஆடுகளைத் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அதனால் காரின் பதிவு நம்பர், மாடல் அடிப்படையில் போலீஸார் விசாரணையை தொடங்கினர். காரின் பதிவு நம்பரை போலீஸார் விசாரித்தபோது அது இருசக்கர வாகனத்தின் நம்பர் எனத் தெரியவந்தது.

இருப்பினும் ஆடுகளைத் திருடிச் சென்ற காரை சிசிடிவி உதவியோடு போலீஸார் பின்தொடர்ந்தனர். அப்போது அந்தக் கார், அனகாபுத்தூரில் உள்ள மெக்கானிக் கடையில் நிறுத்தப்பட்டிருப்பதை போலீஸார் கண்டறிந்தனர் .உடனடியாக அங்கு விசாரித்தபோது, காரின் உரிமையாளர் ஜெயக்குமார் என்றும் அவரின் வீடு அனகாபுத்தூர், கருணாநிதி நகரைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. உடனடியாக அங்குச் சென்ற போலீஸார் ஜெயக்குமாரிடம் விசாரித்தனர். விசாரணையில் ஜெயக்குமாருடன் சேர்ந்து பொழிச்சலூரைச் சேர்ந்த சரோஜினி (40) என்பவரும் ஆடுகளைத் திருடி ஆடம்பரமாக வாழ்ந்தது தெரியவந்தது. அதனால் போலீஸார் சரோஜியைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து சங்கர்நகர் காவல் நிலைய போலீஸார் கூறுகையில், “ஜெயக்குமார், ஆட்டோ டிரைவராக இருந்திருக்கிறார். அப்போது சரோஜினியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆட்டோ மூலம் ஜெயக்குமாருக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. அந்தச் சமயத்தில்தான் ஆடுகள் திருட்டு தொடர்பான செய்திகளை இருவரும் பார்த்திருக்கிறார்கள். அதனால், ஜெயக்குமாரும் சரோஜினியும் சேர்ந்து ஆடுகளைத் திருட முடிவு செய்தனர். ஆரம்பத்தில் ஆட்டோவில் ஆடுகளைத் திருடியவர்கள் அதன்பிறகு வாடகை கார்களில் ஆடுகளைத் திருடி வந்திருக்கிறார்கள். ஆடுகள் திருடுவதன் மூலம் இவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் வரத் தொடங்கியது. அதனால், இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்து கார் ஒன்றை விலைக்கு வாங்கியிருக்கிறார்கள்.

பின்னர் ஜெயக்குமார் காரை ஓட்ட, முன் இருக்கையில் சரோஜினி அமர்ந்துக் கொண்டு மேய்ச்சலுக்கு விடப்படும் ஆடுகளை நோட்டமிட்டு கொண்டே வருவார். ஆடுகளின் சொந்தகாரர்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு இவர்கள் இருவரும் ஆடுகளை திருடி காரில் வைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்துவிடுவார்கள். பின்னர் திருடிய ஆடுகளை சென்னை விருகம்பாக்கம் இந்திரா நகர் மூன்றாவது தெருவை சேர்ந்த பரூக் (30) என்பவரின் கறிக்கடையில் விற்று வந்திருக்கிறார்கள். திருட்டு ஆடுகள் என்று தெரிந்தும் பரூக் குறைந்த விலைக்கு அவைகளை வாங்கியிருக்கிறார். இதன்மூலம் மூன்று பேருக்கும் லட்சக்கணக்கில் பணம் கிடைத்திருக்கிறது. அந்தப் பணத்தில் ஆடம்பரமாகவும் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். தற்போது மூன்று பேரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தொடர்ந்து அவர்களிடம் விசாரித்தபோது கடந்த ஆறு மாதங்களாக 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை திருடியதை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்” என்றனர்.