இந்த படங்களின் முதல் நாள் வசூல் என்ன? எந்த படம் கலெக்ஷனில் முந்தி நிற்கிறது என்பதை தெரிந்து கொள்ள காத்திருக்கும் ரசிகர்களுக்கு இதோ அப்டேட்.
வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் வாரிசு பேமிலி எண்டர்டெயினர் படம் என்பதால் குடும்பங்கள் கொண்டாடும் லிஸ்ட்டில் இணைந்துள்ளது. குடும்ப செண்டிமெண்ட், டான்ஸ், பாட்டு என வழக்கமாக விஜய் படங்களில் இருந்து சற்று மாறுபட்டிருக்கும் இந்தப்படம் விஜய் ரசிகர்களை பெரிதும் கவரவில்லை என கூறப்படுகிறது.
RRR, KGF என மற்ற தென்னிந்திய படங்கள் ஹாலிவுட்டுக்கு டஃப் கொடுக்க முயற்சிக்கும் நேரத்தில் விஜய் இந்த படத்தை தேர்வு செய்தது சற்று சறுக்கல் தான் என சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பீஸ்ட் படம் ஏமாற்றம் அளித்ததை அடுத்து வாரிசு படமும் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமையவில்லை. இதையெல்லாம் தாண்டி வாரிசு மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது. சென்னையில் முதல் நாள் 98 சதவீதம் திரையரங்குகள் நிரம்பி இருந்தன. புதுச்சேரியில் 100 சதவீதம் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல்.
துணிவுடன் போட்டி போட்டு வெளியான வாரிசு முதல் நாள் இந்தியாவில் 26 கோடியே 50 லட்சம் வரை வசூலித்துள்ளதாம். தமிழகத்தில் 17 கோடி ரூபாயும், கர்நாடகாவில் 5 கோடி ரூபாயும், கேரளாவில் 3.5 கோடி ரூபாயும், மற்ற மாநிலங்களில் இருந்து 1 கோடி ரூபாய் வரையிலும் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாடுகளின் வசூலையும் சேர்த்தால் 30 கோடி ரூபாயை தாண்டியுள்ளது வாரிசு. அடுத்தடுத்து பொங்கல் விடுமுறை வருவதால், வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துணிவு படமும் வசூலை வாரிக்குவித்து வருகிறது. விறுவிறு கதைக்களம் ரசிகர்களை கவர்ந்துள்ளதால், படம் அஜித் ரசிகர்களையும் தாண்டி பலரையும் கவர்ந்துள்ளது. இந்தப்படமும் இந்திய அளவில் முதல் நாள் 26 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. அடுத்தடுத்து வரும் விடுமுறை நாட்கள் வாரிசு, துணிவு படங்களின் வசூலை அதிகரிக்கும் என்பதால், எந்த படத்தின் வசூல் அதிகமாக இருக்கும் என்பதை இப்போது கணிக்க முடியாது. முதல் நாளைப்பொறுத்த வரை சற்று தான் முன்பின் வசூல் இருந்துள்ளது. இந்த இரண்டு படங்களும் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலிக்கும் என படக்குழு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.