சட்டப்பேரவையில் இன்று: அமைச்சர் உதயநிதியின் முதல் பதில் இது தான்!

ஆண்டின் முதல் சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் ஜனவரி 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது, நாளை ஜனவரி 13ஆம் தேதியுடன் இந்த கூட்டத் தொடர் முடிவடைகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறையின் அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

அமைச்சரவையில் புதிதாக இடம்பெற்றுள்ள
உதயநிதி ஸ்டாலின்
இந்த கூட்டத் தொடரில் தான் அமைச்சராக கலந்து கொண்டார். அமைச்சரவை சீனியாரிட்டி பட்டியலில் அவருக்கு பத்தாவது இடம் வழங்கப்பட்டுள்ளது.

இன்று காலை சட்டப்பேரவை கூடிய பின்னர் திருப்பூரில் விளையாட்டு மைதானம் அமைப்பது குறித்து சட்டப்பேரவை உறுப்பினர் செல்வராஜ் கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக சட்டப்பேரவையில் பதிலளிக்க எழுந்தபோது திமுக உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கைதட்டி ஆராவாரம் செய்து உற்சாகப்படுத்தினர்.

“திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் 8 ஏக்கர் பரப்பளவில் ரூ. 18 கோடி மதிப்பில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்கப்பட்டு வருகின்றது. இதில், பார்வையாளர்கள் அமரும் வகையிலான திறந்தவெளி விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சி கூடம், 400 மீட்டர் தடகள ஓடு பாதை, கால்பந்து மைதானம், டென்னீஸ், கையுந்துப் பந்து, கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கான ஆடுகள வசதிகள் உருவாக்கப்படும்.

அதேபோல், திறந்தவெளி மைதானத்திற்கான கட்டுமானப் பணிகள் பொதுப்பணித்துறையால் நவம்பர் 2021 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போது 60 விழுக்காடு பணிகள் முடிவடைந்துள்ளன.

கைப்பந்து ஆடுகளப் பணிகள், பார்வையாளர்கள் அமரக்கூடிய கேலரி, 400 மீ தடகள் பாதை, கால்பந்து மைதானம் ஆகியவற்றை ஏப்ரல் 2023-க்குள் முடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.